Homeஅரசியல்அன்வாருக்கு எதிராக விரைவில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் - பெரிக்காத்தான் நேஷ்னல் திட்டம்

அன்வாருக்கு எதிராக விரைவில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் – பெரிக்காத்தான் நேஷ்னல் திட்டம்

கோலாலம்பூர், ஜூலை 26-

பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் முன்மொழிய உள்ளதாக பெரிக்காத்தான் நேஷ்னல் அறிவித்துள்ளது.

மெர்டேகா சதுக்கத்தில் நடைபெற்ற Turun Anwar எனும் எதிர்ப்பேரணியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், எதிர்க்கட்சித் தலைவர் டத்தோ ஸ்ரீ ஹம்ஸா ஸைனுடின் அதனைத் தெரிவித்தார்.

இந்தத் தீர்மானம் விரைவில் மக்களவைத் தலைவர் டத்தோ ஸ்ரீ ஜோஹாரி அப்துலிடம் சமர்ப்பிக்கப்படும் என்று டத்தோ ஸ்ரீ ஹம்ஸா கூறினார்.

இருப்பினும், இந்தத் தீர்மானத்தை எப்போது முன்மொழிவது என்பது குறித்து தெளிவான தகவலை அவர் வெளியிடவில்லை.

“பொறுத்திருங்கள், நாங்கள் சரியான நேரத்தில் இதைச் செய்வோம்,” என்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

கடந்த ஜூலை 21, 2025 அன்று, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், எதிர்க்கட்சியினர் நம்பிக்கையில்லா தீர்மானத்தை முன்வைத்தால், அதை நாடாளுமன்றத்தில் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும், இதற்கு அனுமதி அளிக்குமாறு மக்களவைத் தலைவருக்கு அறிவுறுத்தியதாகவும் கூறியிருந்தார்.

“நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை முன்மொழியுங்கள். உங்களுக்கு பெரும்பான்மை ஆதரவு இருந்தால், முன்னேறுங்கள். இதுதான் நமது முறை,” என்று அவர் பிரதமர் துறையின் மாதாந்திர கூட்டத்தில் தெரிவித்திருந்தார்.

2022 நவம்பர் 19-இல் நடைபெற்ற 15-வது பொதுத் தேர்தலில், டத்தோ ஸ்ரீ அன்வாரின் பக்காத்தான் ஹரப்பான் கூட்டணி 82 இடங்களைப் பெற்றாலும், அரசாங்கத்தை அமைக்க, அது போதுமானதாக இல்லை.

இதனைத் தொடர்ந்து, அப்போதைய பேரரசர் அல் சுல்தான் அப்துல்லா அகமது ஷாவின் தலையீட்டால், தேசிய முன்னணி, சரவாக் கட்சிகளின் கூட்டமைப்பு – GPS, சபா மக்கள் கூட்டமைப்பு – GRS மற்றும் பிற சிறிய கட்சிகளின் ஆதரவுடன் டத்தோ ஸ்ரீ அன்வார் தலைமையில் ஒருமைப்பாட்டு அரசாங்கம் அமைந்தது.

2022 டிசம்பர் 19-இல், டத்தோ ஸ்ரீ அன்வார் தனது அரசாங்கத்தின் நம்பிக்கை வாக்கெடுப்பை நாடாளுமன்றத்தில் முன்மொழிந்து, குரல் வாக்கெடுப்பு மூலம் வெற்றி பெற்றார். இந்த வாக்கெடுப்பு, அவரது அரசாங்கத்தின் முறைமையை உறுதிப்படுத்தியது.

இருப்பினும், பெரிக்காத்தான் நேஷ்னல் தலைவர் முன்னாள் பிரதமர் தான் ஸ்ரீ முஹிடின் யாசின், அன்வாரின் ஆதரவு குறித்து சந்தேகம் எழுப்பியதோடு, 115 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தனக்கு இருப்பதாகக் கூறியிருந்தார்.

spot_img

latest articles

explore more