கோலாலம்பூர், டிச. 3-

மலேசிய இந்திய சமூகத்தில் ஒற்றுமை என்பது முன்னேற்றத்திற்கும் சக்தி பெறுவதற்கும் மிக முக்கியமான அடித்தளம் என பிபிபி தேசிய தலைவர் டத்தோ டாக்டர் லோக பால மோகன் தெரிவித்தார் .

கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு அவர் இந்தச் செய்தியை வெளியிட்டார்.

சைவ மரபில் முக்கியமான இடம் வகிக்கும் கார்த்திகை திருவிழா, முருகப் பெருமானின் உருவாக்கத்தையும், பரமசிவன் ஜோதி லிங்கமாகத் தோன்றியதையும் நினைவுகூரும் விழாவாகும். கிருத்திகை நட்சத்திரத்துடன் கூடிய பௌர்ணமி நாளிலும் தமிழ் மாதமான கார்த்திகையின் தொடக்கமாகவும் இந்த விழா கொண்டாடப்படுகிறது.

இந்தத் திருநாளில் வீடுகள் மற்றும் கோவில்களில் மண் விளக்குகள் ஏற்றி தீபம் ஏற்றுவது புதிய நம்பிக்கை, தொடக்கம் மற்றும் வளம் என்பதைக் குறிக்கும் என்றார்.

இத்திருநாள் வாழ்த்துச் செய்தியில், இந்தியர்களின் ஒற்றுமை சமூக முன்னேற்றத்திற்கான மிகப் பெரிய பலம் என்றார் டாக்டர் லோக பாலா.

“நாம் ஒன்றுபட்டிருக்கும் வரையில், நமது குரல் அரசு மற்றும் சமூகத் தேவைகளில் தெளிவாகக் கேட்கப்படும். பிரிந்துவிட்டால், நம் கோரிக்கைகள் கவனிக்கப்படாமல் போகும் ஆபத்து ஏற்படலாம் ” என்பதை அவர் சுட்டிக் காட்டினார்.

அரசியல், சமூக, பொருளாதார வேறுபாடுகள் இருந்தாலும், இந்தியர்கள் அனைவரும் தங்களின் முன்னேற்றத்திற்கும் நிலைத்தன்மைக்குமான ஒற்றுமையை தக்கவைத்துக் கொள்ள வேண்டும்.

கார்த்திகை திருநாளின் ஒளி அனைவரையும் இணைக்கும் சக்தியாக அமைய வேண்டும்.

“கார்த்திகையின் ஒளி நமது எண்ணங்களை ஒளிரச் செய்து, வேறுபாடுகளைப் புறந்தள்ளி அனைவரையும் ஒன்றுபடுத்தட்டும்” என்றார்.