Homeமலேசியாடான் ஸ்ரீ கே.ஆர். சோமா மொழி இலக்கிய அறவாரியத்தின் இலக்கியப் போட்டிகள்!

டான் ஸ்ரீ கே.ஆர். சோமா மொழி இலக்கிய அறவாரியத்தின் இலக்கியப் போட்டிகள்!

கோலாலம்பூர்:

தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தின் டான் ஸ்ரீ கே.ஆர். சோமா மொழி இலக்கிய அறவாரியம், கடந்த ஆண்டுகளைப்போல இந்த ஆண்டும் 34 வது ஆண்டாக சிறுகதை (பொதுப்பிரிவு), மரபுக்கவிதை, கட்டுரை, புதுக்கவிதை, சிறுகதை (மாணவர் பிரிவு) என 5 பிரிவுகளை உள்ளடக்கிய இலக்கியப் போட்டிகளை நடத்துகிறது.

இந்தப் போட்டிகள் 1.4.2026 தொடங்கி 30.6.2026 ஆம் நாள் வரையில் நடைபெறும். இலக்கியத் துறைச்சார்ந்த படைப்பாளர்களும், ஆர்வமுள்ள எழுத்தாளர்களும், உயர் கல்வி நிலைய மாணவர்களும் கலந்து கொள்ளும் வகையில், இப்போட்டிகள் இரண்டு பிரிவுகளாக நடத்தப்படுகின்றன. புதிய எழுத்தாளர்களுக்கு களம் அமைத்து தரும் தளமாகவும் இந்தப் போட்டிகள் அமைகின்றன.

1992 ஆம் ஆண்டு தொடங்கி, கடந்த 33 ஆண்டுகளாக டான் ஸ்ரீ கே.ஆர்.சோமா மொழி இலக்கிய அறவாரியத்தால் நடத்தப்பட்டு வரும் இந்த இலக்கியப் போட்டிகளின் விளைப்பயனாக நாட்டில் ஏராளமான புதிய எழுத்தாளர்களும், படைப்பாளர்களும் உருவாகி, தமிழ் இலக்கிய உலகத்திற்கு சிறந்த படைப்புகளை வழங்கி வருகின்றனர்.

ஆகவே, இந்தாண்டு நடைபெறும் போட்டிகளில் அதிகமானோர் கலந்து கொண்டு, தமிழ் இலக்கிய உலகத்தின் பரிணாம வளர்ச்சியை பதிவு செய்ய வேண்டும் என சங்கத்தின் நிர்வாக இயக்குனரும், டான் ஸ்ரீ கே.ஆர். சோமா மொழி இலக்கிய அறவாரியத்தின் செயலாளருமாகிய டத்தோ பா.சகாதேவன் கேட்டுக்கொள்கிறார்.

1. நோக்கம்

தமிழ்மொழிக்கும் இனத்திற்கும் கீழ்க்காணும் துறைகள் சார்ந்து மிகுபயன் விளைவித்தல்.

அ. மொழிச்சார்ந்த இலக்கிய வடிவங்களின் புதிய பரிணாம வளர்ச்சிகளை பதிவு செய்தல்

ஆ. இனம் சார்ந்த கலை, கலாச்சாரப் பண்பாட்டுக் கூறுகளை வளப்படுத்துதல்.

இ. சமுதாய முன்னேற்றத்திற்குக் கல்வி, அறிவியல், வாணிகம், தொழில் சார்ந்த படைப்பிலக்கியங்களின் வழி வாழ்க்கையை மேம்படுத்துதல்.

ஈ மனிதநேயமும் அகமேம்பாடும் படைப்பிலக்கியங்களின் வழி வளர்த்தல்.

2. பரிசுத்தொகைகள்

1. முதல் பரிசு – மலேசிய ரிங்கிட் – 2,500

2. இரண்டாம் பரிசு – மலேசிய ரிங்கிட் – 1,750

3. மூன்றாம் பரிசு – மலேசிய ரிங்கிட் – 1,250

4. ஆறுதல் பரிசுகள் – மூன்று தலா மலேசிய ரிங்கிட் – 500

3. பிரிவுகள்

(i) பொது

அ. சிறுகதை
ஆ. கட்டுரை

இ. மரபுக்கவிதை

ஈ. புதுக்கவிதை

(ii). மாணவர் பிரிவு

அ. சிறுகதை

4. படைப்பு

அ. துறை : கொடுக்கப்பட்டிருக்கும் ஏதேனும் ஒரு துறைச் சார்ந்ததாக இருக்க வேண்டும்.
ஆ. மொழி : தமிழ்
இ. மொழித்தரம் : தமிழ்மொழியின் இலக்கணம், சொல்லாட்சி, மரபு ஆகிய கூறுகளில்
தரமுடையதாக இருக்க வேண்டும்.
ஈ. பங்கேற்புத்தகுதி : கொடுக்கப்படும் தலைப்புக்கேற்பவும் சொந்தப் படைப்பாகவும்
இருக்க வேண்டும்.

5. படைப்பாளர் தகுதிகள்

அ. பொதுப்பிரிவு
மலேசிய நாட்டு குடியுரிமையுள்ள எழுத்தாளர்கள் மட்டுமே இந்தப் போட்டிகளில் கலந்து கொள்ள முடியும். ஒருவர் ஒரு துறையில் ஒரு படைப்பை மட்டுமே போட்டிக்கு அனுப்பி வைக்கமுடியும். படைப்புகள் தங்களது சொந்தப் படைப்பு என்பதை உறுதிப்படுத்தும் கடிதத்துடன் தங்களின் தெளிவான அடையாள அட்டையின் நகலும், அண்மையப் புகைப்படமும் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
(படைப்பாளர்கள் தமது அசல் படைப்புடன் மேலும் இரு நகல்கள் எடுத்து 3 படிகளாக அனுப்பி வைக்க வேண்டும்.)

ஆ. மாணவர் பிரிவு
மாணவர் பிரிவு படைப்பாளர்கள், உயர் கல்விக்கூடங்கள் (ஆறாம் படிவம் / கல்லூரிகள் / மெட்ரிகுலேஷன்) மற்றும் பல்கலைக்கழகங்களில் முழுநேரமாகப் பயில்கின்றவர்களாக இருக்க வேண்டும். போட்டிக்கு அனுப்பப்படும் படைப்புகள் தங்களின் சொந்தப்படைப்பு என்பதை உறுதி செய்யும் வகையில், தங்கள் கல்விக்கூடங்களின் பொறுப்பாசிரியரின் உறுதிச் சான்றிதழையும் இணைத்து, தெளிவான அடையாள அட்டையின் நகலுடன், அண்மைய புகைப்படத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும்.

6. போட்டிப் பிரிவுகள்

அ. சிறுகதை

சிறுகதைகள், மனித வாழ்வியலோடு ஒட்டிய சம்பவங்கள், சமுதாய உணர்வுகள், சீர்திருத்தக் கருத்துக்கள் ஆகியவற்றை சுவைப்படச் சித்தரிப்பதாக, படைப்புகள் 5 பக்கங்களுக்குள் அமைய வேண்டும்.

ஆ. மரபுக்கவிதை

எண்சீர், அறுசீர் விருத்தங்களாகவும், நான்கடி சந்தப்பாடலாகவும் ‘ உண்மை உழைப்பே உயர்வைக் காட்டும் ’ அல்லது ‘ தாழ்ந்துப் போகாதே வீரமிக்கத் தமிழாநீ ’ என்ற தலைப்புகளில் ஒன்றனுக்கு 80 வரிகளுக்கு மேற்போகாமல், கவிதைகள் எழுதப்பட வேண்டும். மலேசியத் தமிழர்களின் முன்னேற்றம், ஒற்றுமை, மொழிப்பற்று மற்றும் மேன்மைக்கான வழிகள் என்ற கருப்பொருள் நாட்டப்படுவதுடன், மரபு பிசகாமல் கவிதைகள் அமைய வேண்டும். மேலும் ஒவ்வொரு படைப்பிலும் 10 உவமைகள் குறையாமல் இடம் பெற வேண்டும்.

இ. புதுக்கவிதை

‘மனிதத்தை இணைப்பது சமயமும் மொழியும்’ அல்லது ‘ போரைக்கடந்த மனித நேயம்’ என்ற பொருளில், 80 வரிகளுக்கு மிகாமல் புதுக்கவிதைகள் எழுதப்பட வேண்டும். வழங்கப்பட்டுள்ள தலைப்பை உள்ளடக்கியே கவிதைகள் அமைய வேண்டும்.

ஈ. கட்டுரை

படைப்புகள் ஆய்வுக் கட்டுரையாகவும், உரிய சான்றுகள், துணை நூல்களின் குறிப்புகளுடனும் வழங்கப்பட்டுள்ள ஒரு தலைப்பில், 8 பக்கங்களுக்கு மிகாமல் அமைய வேண்டும்.

தலைப்புகள்

அ. மலேசியத் தமிழரின் சுவடுகள்

ஆ. சமத்துவம் மலர்வதில் ஊடகங்களின் பங்கு

உ. பொது விதிகள்

(i) எல்லா படைப்புகளும் கணினியில் தட்டச்சு செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
(ii) போட்டிக்கு அனுப்பி வைக்கப்படும் படைப்புகள் அனைத்தும், வேறு எந்த நூல்களிலோ, சிறுகதை, கவிதைத் தொகுப்புகளிலோ, நாளிதழ்களிலோ, மாத, வார இதழ்களிலோ பிரசுரிக்கப்பட்டவைகளாகவோ அல்லது மின் ஊடகங்களில் வெளிவந்தவைகளாகவோ இருக்கக்கூடாது.

(iii) போட்டிகளுக்கு அனுப்பிவைக்கப்படும் படைப்புகள், குறிப்பிட்ட ஓர் இனத்தையோ, மதத்தையோ சிறுமைப்படுத்துவதாக இருந்தாலோ, இனத்துவேசம், தேச நிந்தனை, அல்லது நாட்டுப்பற்றுக்கு ஊறு விளைவிக்கும் கருத்துக்களைக் கொண்டிருந்தாலோ, அவை பங்கேற்பில் இருந்து நீக்கப்படும்.

(iv) போட்டிகளுக்கு அனுப்பிவைக்கப்படும் அனைத்துப்படிவங்களும் தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தின் டான் ஶ்ரீ கே.ஆர்.சோமா மொழி இலக்கிய அறவாரியத்திற்கு சொந்தமாகும். இதில் அறவாரியத்தின் நூல் தொகுப்புகளில் வெற்றி பெறும் படைப்புகளின் பதிப்புரிமை தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தின் டான் ஶ்ரீ கே.ஆர்.சோமா மொழி இலக்கிய அறவாரியத்திற்கே உரியதாகும்.

(v) போட்டியில் கலந்து கொள்ளும் எழுத்தாளர்கள், தனித்தாளில் தங்களின் முழுப்பெயர், புனைப்பெயர், முகவரி மற்றும் தொடர்பு எண்களை ஆங்கிலத்தில் எழுதி, தங்களது படைப்புகளுடன் அடையாள அட்டையின் நகலையும், அண்மைய புகைப்படத்தையும் இணைத்து அனுப்பும்படி கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

(மேற்குறிப்பிட்டுள்ள ஆவணங்களும், தகவல்களும் இணைக் கப்படாவிடில், அனுப்பி வைக்கப்படும் படைப்புகள் போட்டிகளில் இருந்து தவிர்க்கப்படலாம்.)

ஊ. நடுவர்கள்

தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தின், டான் ஸ்ரீ கே,ஆர். சோமா மொழி இலக்கிய அறவாரியம் நியமிக்கின்ற நடுவர்களால், வெற்றி பெறும் படைப்புகள் தேர்ந்தெடுக்கப்படும். நடுவர்களின் முடிவே இறுதியானதும் ஆகும். இந்தப் போட்டிகள் குறித்தும் மற்றும் போட்டிகளின் முடிவுகள் குறித்தும் கடிதம் அல்லது தொலைபேசி வாயிலான எவ்வித தொடர்புகளும் ஏற்றுக்கொள்ளப் படமாட்டாது.

கூட்டுறவு சங்கத்தில் தற்போது பணிபுரிபவர்கள் இந்தப்போட்டியில் கலந்து கொள்ள இயலாது.
போட்டிக்குரிய எல்லா படைப்புகளும் எதிர்வரும் 30.06.2026ஆம் நாளுக்குள் கீழ்க்காணும் முகவரிக்கு வந்து கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும்.

டத்தோ பா.சகாதேவன் PJN, SSA, PPT, ANS
நிர்வாக இயக்குனர் / செயலாளர்
தேசிய நில நிதி கூட்டுறவு சங்கம்6
33 வது இலக்கியப் போட்டிகள் 2025
டான் ஸ்ரீ கே.ஆர். சோமா மொழி இலக்கிய அறவாரியம்
10 வது மாடி, விஸ்மா துன் சம்பந்தன்
50768 கோலாலம்பூர்

DATUK B.SAHADEVAN PJN,SSA,PPT,ANS
Managing Director / Secretary
NATIONAL LAND FINANCE COOPERTAIVE SOCIETY
33 rd Literary Contest’ 2025
Tan Sri K.R.Soma Language & Literary Foundation,
Level 10, WismaTun Sambanthan
50768 Kuala Lumpur

spot_img

latest articles

explore more