கிள்ளான்:
கடந்த ஞாயிற்றுக்கிழமை சிலாங்கூர், கிள்ளான், ஜாலான் ராயா பாராட்டில் எதிர்த்திசையில் காரைச் செலுத்தி, மோட்டார் சைக்கிள் ஓட்டுநரின் மரணத்திற்கு காரணமான 28 வயது சக்தி கணபதி ரவிச்சந்திரன் மீது நேற்று கிள்ளான் மெஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
மது மற்றும் போதைப்பொருள் தாக்கத்துடன் சக்தி கணபதி ரவிச்சந்திரன் செலுத்திய கார், 33 வயது அமிருல் ஹபீஸ் ஓமாரின் மோட்டார் சைக்கிளை பலமாக மோதியது.
அதில், தூக்கி வீசப்பட்ட அமிருல் மைவி வாகனத்தின் மீது விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மெஜிஸ்ட்ரேட் கார்த்தியாயினி அம்புஅழகன் முன்னிலையில் நடைபெற்ற விசாரணையில், சக்தி கணபதி மீது பிரிவு 302-ன் கீழ் கொலைக் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது. மேலும், அவர் பென்சோ (Benzo) மற்றும் THC போன்ற போதைப்பொருட்களை உட்கொண்டிருந்ததை ஒப்புக்கொண்டார்.
கொலைக் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு மரண தண்டனை அல்லது 40 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை மற்றும் கசையடிகள் விதிக்கப்பட வாய்ப்புள்ளது. உயிரிழந்த அமிருல் மூன்று குழந்தைகளுக்குத் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.

