கோலசிலாங்கூர்:

மலேசிய இந்து சங்கம் கோலசிலாங்கூர் வட்டாரப் பேரவையின் 48ஆம் ஆண்டு திருமுறை விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை ரிவர்சைட் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் சிறப்பாகவும் விமரிசையாகவும் நடைபெற்றது.

முக்கிய பிரமுகர்களின் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மாவட்டத்திலுள்ள ஆரம்ப மற்றும் இடைநிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

காலை இறை வழிபாட்டுடன் நிகழ்ச்சி தொடங்கியதைத் தொடர்ந்து, பல்வேறு பிரிவுகளின் கீழ் திருமுறை தொடர்பான போட்டிகள் நடத்தப்பட்டன. மாணவர்களின் பங்கேற்பும் உற்சாகமும் விழாவிற்கு மேலும் சிறப்பூட்டின.

விழாவில் உரையாற்றிய மலேசிய இந்து சங்கம் கோலசிலாங்கூர் வட்டாரப் பேரவைத் தலைவர் பன்னீர்செல்வம் வேலு, தன்னார்வளர்கள், சமூகத் தலைவர்கள், பொதுமக்கள் மற்றும் ஆலயங்களின் நிதி ஆதரவின் மூலம் இந்த திருமுறை விழா வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக தெரிவித்தார்.

மேலும், வட்டாரப் பேரவை நடத்தும் சமய நிகழ்வுகளில் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை தொடர்ந்து பங்கேற்கச் செய்து, சமய மற்றும் பண்பாட்டு விழிப்புணர்வை வளர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

அத்துடன், இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் அடுத்த கட்டமாக சிலாங்கூர் மாநில அளவில் நடைபெறவுள்ள திருமுறைப் போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெறுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

நிகழ்வின் நிறைவாக, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கிண்ணங்களும் நற்சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. மேலும், பங்கேற்ற அனைத்து மாணவர்களும் பதக்கங்கள் மற்றும் நற்சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் மலேசிய இந்து சங்கம் சிலாங்கூர் மாநில பேரவையின் உதவி பொருளாளர் தொண்டர்மாமணி சுப்ரமணியம் வைத்தி, துணைத் தலைவர் தொண்டர்மணி சரஸ்வதி வேலு, மலேசிய தேவேந்திர இயக்கத்தின் தேசிய தலைவர் பாஸ்கரன் மஹாமுனி மற்றும் நிர்வாகத்தினர், ம.இ.கா. தஞ்சோங் காராங் பொருளாளர் செல்லயா, மலேசிய இந்து தர்ம மாமன்றத்தின் சிலாங்கூர் மாநில தலைவர் நடராஜ், கோலசிலாங்கூர் கெஅடிலான் தலைவர் சிவபாலன், மலாவாத்தி சட்டமன்ற ஒருங்கிணைப்பாளர் தீபன் சுப்ரமணியம், மலேசிய இந்து சங்கம் பத்தாங் பெர்ஜீந்தை பேரவைத் தலைவர் தொண்டர்மணி ஈஸ்வரி ராமன், திருமுறை தலைமை நீதிபதி தொண்டர்மணி அன்பரசன், ரிவர்சைட் தமிழ்ப்பள்ளி தலைமை ஆசிரியர் தொண்டர்மணி விஜயலெட்சுமி, ராஜா மூசா தோட்ட தமிழ்ப்பள்ளி தலைமை ஆசிரியர், ஜெராம் இந்தியர் பகுதி பொறுப்பாளர் மணிவண்ணன், மலேசிய இந்து சங்கம் சிலாங்கூர் மாநில பேரவையின் முன்னாள் தலைவர் தொண்டர்மாமணி முனியாண்டி முத்தன் மற்றும் பத்து கேவ்ஸ் இந்தியர் கலை கலாசார தலைவர் தினகராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.