ஜொகூர் பாரு:
நடைபெறவுள்ள ஜொகூர் மாநிலத் தேர்தலில், லயாங்-லயாங் சட்டமன்றத் தொகுதி வாக்காளர்கள் மடானி அரசாங்கத்தின் கீழ் முன்னேற்றத்தையும், நிலைத்தன்மையையும், ஒளிமயமான எதிர்காலத்தையும் விரும்புவதாக பிகேஆர் கட்சியின் தேசியத் உதவித் தலைவர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
நேற்று லயாங்-லயாங் சமூக மண்டபத்தில் அமைந்துள்ள வேட்புமனுத் தாக்கல் மையத்திற்கு பக்காத்தான் ஹாராப்பான் வேட்பாளர் குணா பாலகிருஷ்ணனுடன் வந்த ஆதரவாளர்கள், தன்னார்வலர்கள் மற்றும் தேர்தல் களப்பணியாளர்களின் உற்சாகமான வருகையும், அசைக்க முடியாத ஆதரவும், மக்கள் நேர்மறையான மாற்றத்தை எவ்வளவு தீவிரமாக எதிர்பார்க்கிறார்கள் என்பதற்குச் சான்றாக அமைந்ததாக அவர் குறிப்பிட்டார்.
வேட்புமனுத் தாக்கல் எவ்விதச் சிக்கலுமின்றி சுமுகமாக நடைபெற்றது என்றும், அதன் பின்னரும் தொண்டர்களின் உற்சாகம் குறையாமல் தமக்கு ஊக்கமளிக்கும் முழக்கங்களை எழுப்பி, வேட்பாளருக்கு முழுமையான ஆதரவை வழங்கியதே மிக முக்கியமான நிகழ்வாக அமைந்தது என்றும் அவர் தனது முகநூல் பதிவில் தெரிவித்தார்.
இப்போது தேர்தல் களப்பணியைத் தொடங்கிவிட்டதாகவும், லயாங்-லயாங் தொகுதியில் பக்காத்தான் ஹாராப்பானின் வெற்றியை உறுதி செய்வதே தமது ஒரே நோக்கம் என்றும் அவர் தெரிவித்தார்.
வாக்குப்பதிவு நாளான ஜூலை 11-ஆம் தேதி வாக்காளர்களின் ஆதரவை வெற்றியாக மாற்றும் வகையில், தேர்தல் காலம் முழுவதும் வீடு வீடாகச் சென்று மக்களைச் சந்தித்து ஆதரவைத் திரட்டுமாறு அனைத்துத் தேர்தல் களப்பணியாளர்களையும் அவர் கேட்டுக்கொண்டார்.
லயாங்-லயாங் தொகுதியில் பக்காத்தான் ஹாராப்பான் வேட்பாளர் குணா பாலகிருஷ்ணன், பெரிக்காத்தான் நேசனல் தரப்பின் இந்நாள் சட்டமன்ற உறுப்பினர் அப்துல் முத்தலிப் அப்துல் ரஹீம் மற்றும் பாரிசான் நேசனல் வேட்பாளர் சுவா ஜியான் பூன் ஆகியோருடன் மும்முனைப் போட்டியில் களமிறங்கியுள்ளார்.
கடந்த 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற ஜொகூர் மாநிலத் தேர்தலில், அப்துல் முத்தலிப் 2,815 வாக்குகள் பெரும்பான்மையில் இத்தொகுதியைக் கைப்பற்றியிருந்தார்.
ஜொகூர் மாநிலத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஜூலை 11-ஆம் தேதியும், முன்கூட்டியே வாக்களிக்கும் முறை ஜூலை 7-ஆம் தேதியும் நடைபெற உள்ளது.

