கோலாலம்பூர்
மலேசிய இந்து சங்கத்தின் மத்திய செயற்குழுத் தேர்தல் எதிர்வரும் ஜூலை 19ஆம் தேதி சன்வே முருகன் ஆலயத்தில் நடைபெறவுள்ள நிலையில், “புதிய தலைமையும் புதிய மாற்றமும் அவசியம்” என்பதை வலியுறுத்தி மறுமலர்ச்சி அணி தேர்தலில் களமிறங்குகிறது.
இந்த அணியின் சார்பில் மொத்தம் 9 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
கடந்த 18 ஆண்டுகளாக ஒரே தலைமையே சங்கத்தை வழிநடத்தி வருவதால், தற்போதைய நிர்வாகத்தில் மாற்றம் ஏற்பட்டு, புதிய தலைமைக்கும் இளைஞர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டிய காலம் வந்துவிட்டதாக மறுமலர்ச்சி அணியினர் தெரிவித்தனர்.
சங்கத்தின் செயல்பாடுகளைக் காலத்திற்கேற்ப மேம்படுத்துவதோடு, உறுப்பினர்களின் பங்களிப்பை அதிகரித்து, வெளிப்படையான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய நிர்வாகத்தை உருவாக்குவதே தங்களின் நோக்கம் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.
மேலும், வெளிப்படையான நிர்வாகம், உறுப்பினர்களுடன் நெருக்கமான தொடர்பு, மாநிலக் கிளைகளுக்கு அதிக அதிகாரப் பகிர்வு, இளைஞர்கள் மற்றும் பெண்களின் பங்கேற்பை அதிகரித்தல், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சங்கத்தின் செயல்பாடுகளை நவீனப்படுத்துதல் ஆகியவற்றை தங்களின் முக்கிய இலக்குகளாக மறுமலர்ச்சி அணி முன்வைத்துள்ளது.
இதனிடையே, கடந்த 18 ஆண்டுகளாக நீடித்து வரும் தற்போதைய தலைமையா அல்லது புதிய மாற்றத்தை முன்வைக்கும் மறுமலர்ச்சி அணியா என்பதை மலேசிய இந்து சங்க உறுப்பினர்கள் ஜூலை 19-ஆம் தேதி நடைபெறும் தேர்தலில் தீர்மானிக்கவுள்ளனர்.


