புக்கிட் பெண்டேரா:
ரோக்கி என்றழைப்பட்ட செல்லப்பிராணி நாய் கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு புக்கிட் பெண்டேரா நாடாளுமன்ற உறுப்பினர் ஷெர்லீனா அப்துல் ரஷீத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், விலங்குகள் மீதான துன்புறுத்தலுக்கு இஸ்லாத்தில் இடமில்லை என்றும், சட்டத்தை கையில் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு யாருக்கும் அதிகாரமில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
ரோக்கி ஒரு தெருநாய் அல்ல; அது ஒரு குடும்பத்தின் அன்புக்குரிய செல்லப்பிராணி என்றும், இந்தச் சம்பவம் ஒரு விலங்கின் உயிரிழப்பு மட்டுமல்ல, அந்தக் குடும்பம் நேசித்த ஓர் உயிரின் கொடூரமான இழப்பாகும் என்றும் அவர் கூறினார்.
விலங்குகளைத் துன்புறுத்தி கொல்லுவது இஸ்லாமிய போதனைகளுக்கு முற்றிலும் முரணானது என்றும், ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய விலங்குகளிடம் கூட கருணை, பொறுமை மற்றும் நீதியுடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதே இஸ்லாத்தின் போதனையாகும் என்றும் ஷெர்லீனா தெரிவித்தார்.
ரோக்கியின் குடும்பத்தினர் உதவி கோரியபோது, அந்த நாய்க்கு உரிமம் இல்லை என்று கூறி அலட்சியமாக நடந்து கொள்ளப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல்கள் கவலை அளிப்பதாகவும், அவை உண்மையாக இருந்தால் ஏற்றுக் கொள்ள முடியாதவை என்றும் அவர் குறிப்பிட்டார்.
செல்லப்பிராணிக்கு உரிமம் இருந்ததா இல்லையா என்பது நிர்வாக ரீதியான விவகாரம் மட்டுமே என்றும், அது எந்த வகையிலும் விலங்குகள் மீதான துன்புறுத்தலை நியாயப்படுத்தவோ அல்லது அந்தக் குடும்பத்தின் துயரத்தை அலட்சியப்படுத்தவோ முடியாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
சட்டம் மீறப்பட்டிருந்தால், அதனை விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பது அதிகாரிகளின் பொறுப்பு என்றும், ஆனால் எந்தவொரு தனிநபருக்கும் சட்டத்தைத் தாமே அமல்படுத்தும் உரிமை இல்லை என்றும் ஷெர்லீனா கூறினார்.
இந்தச் சம்பவத்தை மதத்தின் பெயரில் நியாயப்படுத்த முயற்சிப்பது இஸ்லாத்திற்கு பெரும் அவமதிப்பாகும் என்றும், அனைத்து உயிரினங்களிடமும் கருணையுடன் நடந்துகொள்ளுமாறு நபிகள் நாயகம் போதித்துள்ளதாகவும் அவர் நினைவூட்டினார்.
ரோக்கி உயிரிழப்பு தொடர்பாக விரைவான, வெளிப்படையான மற்றும் சுயாதீனமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், தவறு செய்தவர்கள் சட்டத்தின் முன் முழுமையாகப் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
ரோக்கிக்கு நீதி கிடைப்பது ஒரு செல்லப்பிராணிக்காக மட்டுமல்ல என்றும், சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்தவும், பலவீனமான உயிரினங்களைப் பாதுகாக்கவும், சட்டத்தை கையில் எடுக்கும் செயல்களுக்கு மலேசியாவில் இடமில்லை என்பதை உறுதிப்படுத்தவும் அவசியம் என்றும் ஷெர்லீனா அப்துல் ரஷீத் தெரிவித்தார்.


