பார்சிலோனா, ஜன.9 –
லிவர்புல் கால்பந்து கிளப்பின் முன்னணி தாக்குதல் நட்சத்திரம் பிலிப்பே கோத்தின்ஹோவை கழிவு விலையில் வாங்கியிருப்பதாக பார்சிலோனா கிளப்பின் உதவித் தலைவர் ஜோர்டி மேஸ்டேரே தெரிவித்துள்ளார். கோத்தின்ஹோவை வாங்க பார்சிலோனா 19 கோடியே 20 லட்சம் அமெரிக்க டாலரை லிவர்புலுக்கு வழங்கியிருப்பதாக கூறப்படுகிறது.
உலக கால்பந்து வரலாற்றில் மிக அதிக விலைக் கொடுத்து வாங்கப்பட்ட ஆட்டக்காரர்கள் பட்டியலில் கோத்தின்ஹோ 3 ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். ஆனால் கடந்த கோடை காலத்தில் கோத்தின்ஹோவின் விலை 20 கோடி ஈரோ டாலராக நிர்ணயிக்கப்பட்டிருந்ததாகவும் அதனைக் காட்டிலும் குறைவான விலையில் ஜனவரி மாதம் பார்சிலோனா , கோத்தின்ஹோவை வாங்கியிருப்பதாகவும் மேஸ்டேரே கூறினார்.
கோத்தின்ஹோவை கொண்டு வர வேண்டும் என்பதில் பார்சிலோனா கடைசி வரை உறுதியாக இருந்ததாக அவர் மேலும் சொன்னார். கோத்தின்ஹோவுக்கு கொடுக்கப்பட்ட விலையை தாங்கள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப் போவதில்லை என அவர் தெரிவித்தார். ஆனால் அவருக்கான விலையில் தங்களுக்கு கழிவு கிடைத்திருப்பதாக மேஸ்டேரே தெரிவித்துள்ளார்.


