லண்டன், ஜன.9 –
இங்கிலாந்து எப்.ஏ கிண்ண கால்பந்துப் போட்டியின் 3 ஆவது சுற்றில் அர்செனல் தோல்வி அடைந்ததை அடுத்து புதிய ஆட்டக்காரர்களை வாங்க தாம் தயாராக இருப்பதாக நிர்வாகி ஆர்சன் வெங்கர் தெரிவித்துள்ளார். 1996 ஆம் ஆண்டில் அர்செனல் நிர்வாகியாக வெங்கர் பொறுப்பேற்ற பின்னர், முதல் முறையாக அந்த கிளப் எப்.ஏ கிண்ணப் போட்டியின் 3 ஆவது சுற்றிலேயே தோல்வி கண்டது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில அர்செனல் 2- 4 என்ற கோல்களில் நோட்டிங்ஹம் போரேஸ்ட் அணியிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. செவ்வாய்கிழமை நடைபெற்ற கராபாவோ கிண்ணப் போட்டியில் செல்சிக்கு எதிரான ஆட்டத்திற்கு முக்கியத்துவம் அளித்ததால் ஆர்சன் வெங்கர், முதன்மை அணியில் அவ்வபோது இடம் பிடிக்கும் 9 ஆட்டக்காரர்களை எப்.ஏ கிண்ணப் போட்டியில் களமிறக்கவில்லை.
அவரின் வியூகம் அர்செனலுக்கு பலத்தை அடியைக் கொடுத்துள்ளது. பிரீமியர் லீக் போட்டியின் புள்ளிப் பட்டியலிலும் 6 ஆவது இடத்தில் உள்ள அர்செனல் மீண்டும் சாம்பியன்ஸ் லீக் போட்டியை இழக்கும் நிலையில் உள்ளது. இந்நிலையில் புதிய ஆட்டக்காரர்களை கொண்டு வர தாம் உத்தேசித்துள்ளதாக வெங்கர் தெரிவித்துள்ளார். இந்த வார தொடக்கத்தில் கிரேக்கத்தின் இளம் தற்காப்பு ஆட்டக்காரர் கொன்ஸ்டான்டினோன்ஸ் மாவ்ரோபானோஸ்பாக்கலை அர்செனல் விலைக்கு வாங்கியுள்ளது.


