Homeமலேசியாகார்ப்பரேட் மாஃபியா ஊழல் புகார்: ரஃபிஸி ரம்லி மறுப்பு

கார்ப்பரேட் மாஃபியா ஊழல் புகார்: ரஃபிஸி ரம்லி மறுப்பு

கோலாலம்பூர்:

பி.கே.ஆர் (PKR) கட்சியின் முன்னாள் துணைத் தலைவரும், பண்டான் நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ ஸ்ரீ ரஃபிஸி ரம்லி, தொழிலதிபர் விக்டர் சின் தொடர்பான ஊழல் புகாரில் தமக்குத் தொடர்பிருப்பதை திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

கார்ப்பரேட் மாஃபியா விவகாரத்தைத் தீர்ப்பதற்காக பி.கே.ஆர் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் 10 மில்லியன் ரிங்கிட் கோரியதாகவும், அதில் 9.5 மில்லியன் ரிங்கிட் கைமாறியதாகவும் கூறப்படும் குற்றச்சாட்டை அவர் நிராகரித்தார்.

இது குறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கிண்டலாகப் பதிவிட்டுள்ள ரஃபிஸி, “பெருநாள் கொண்டாட்டங்களுக்குப் பிறகு எனது உடலில் கொழுப்புதான் கூடியிருக்கிறதே தவிர, கூறப்படுவது போல பணம் வரவில்லை,” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தற்போது பெருநாள் மனநிலையில் இருப்பதால், இது குறித்து நாளை விரிவாக விளக்கமளிக்கப் போவதாகவும் அவர் கூறினார்.

முன்னதாக, கார்ப்பரேட் மாஃபியா சிக்கலைத் தீர்க்க ஒரு பி.கே.ஆர் நாடாளுமன்ற உறுப்பினர் 10 மில்லியன் ரிங்கிட் கேட்டதாகவும், முதற்கட்டமாக தம்மால் 9.5 மில்லியன் ரிங்கிட் மட்டுமே வழங்க முடிந்ததாகவும் விக்டர் சின் 40 பக்கங்கள் கொண்ட ஆவணத்தில் தெரிவித்திருந்தார்.

எஞ்சிய 500,000 ரிங்கிட் வழங்கப்படவில்லை என்றும், வாக்குறுதி அளித்தபடி சிக்கல் தீர்க்கப்படவில்லை என்றும் அவர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (SPRM) உயர் அதிகாரிகள் சிலர், சில நிறுவனங்களின் நிர்வாகிகளை மிரட்டி, பங்குகளைக் குறைந்த விலைக்கு விற்க வற்புறுத்துவதாகக் கூறப்படும் புகாரே இந்த ‘கார்ப்பரேட் மாஃபியா’ விவகாரமாகும்.

இருப்பினும், இந்த புகார்களை SPRM நேற்று மறுத்துள்ளது. குறிப்பிட்ட சில தரப்பினர் மீது எடுக்கப்படும் சட்ட நடவடிக்கைகளைத் திசைதிருப்பவும், ஆணையத்தின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கவும் ஆதாரமற்ற முறையில் இந்தப் புகார்கள் கூறப்படுவதாக SPRM தெரிவித்தது.

 

spot_img

latest articles

explore more