கோலாலம்பூர்:
நாட்டில் மேற்கொள்ளப்படவுள்ள RON95 பெட்ரோல் மானியச் சீரமைப்பினால் பெரும்பான்மையான மக்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுடீன் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
மலேசியாவில் உள்ள சுமார் 90 சதவீத வாகன ஓட்டிகள் மாதம் 100 லிட்டருக்கும் குறைவான எரிபொருளையே பயன்படுத்துகின்றனர் என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், ‘புடி95’ (Budi95) திட்டத்தின் கீழ் தகுதி வரம்பை 300 லிட்டரிலிருந்து 200 லிட்டராகக் குறைப்பது ஒரு சமநிலையான நடவடிக்கை என்றார்.
நாட்டின் நிதிநிலையை உறுதிப்படுத்துவதோடு, உண்மையான இலக்குக் குழுவினருக்கு மட்டும் உதவி சென்றடைவதை இது உறுதி செய்யும் என அவர் விளக்கமளித்தார்.
தற்போது உலகளவில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 100 அமெரிக்க டாலரைத் தாண்டியுள்ள சவாலான சூழலில் மலேசியா இந்த முடிவை எடுத்துள்ளது.
அண்டை நாடான சிங்கப்பூரில் ஒரு லிட்டர் பெட்ரோல் RM10 ஆகவும், ஹாங்காங்கில் RM14 ஆகவும் விற்பனை செய்யப்படும் நிலையில், மலேசிய அரசு மக்களைப் பாதுகாக்கப் போராடி வருகிறது.
சந்தையில் RON95 பெட்ரோலின் உண்மையான விலை தற்போது RM3.87 ஆக இருந்தபோதிலும், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தலைமையிலான அரசு அதை RM1.99 என்ற மானிய விலையிலேயே நிலைநிறுத்தி வருவதாக அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
பெட்ரோல் மானியத்திற்காக மட்டும் அரசாங்கம் மாதம் சுமார் RM4 பில்லியன் செலவிடுவதாகவும், இது அரசாங்கம் நிர்வகிக்க வேண்டிய ஒரு பெரிய பொறுப்பு என்றும் அமைச்சர் கூறினார். பெரும்பாலான மக்களின் சராசரி பயன்பாடு 200 லிட்டருக்கும் குறைவாகவே இருப்பதால், இந்த புதிய வரம்பு சுமையை ஏற்படுத்தாது என்று அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
அதே வேளையில், இ-ஹெய்லிங் (e-hailing) ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கான 800 லிட்டர் சிறப்பு மாத ஒதுக்கீடு தொடர்ந்து தக்கவைக்கப்படும் என்பதையும் அவர் தனது அறிக்கையில் உறுதிப்படுத்தினார்.


