Homeசமூகம்சுங்கை சிப்புட் இந்திய முஸ்லிம் பள்ளிவாசலில் அஷூரா கஞ்சி விநியோகம்

சுங்கை சிப்புட் இந்திய முஸ்லிம் பள்ளிவாசலில் அஷூரா கஞ்சி விநியோகம்

சுங்கை சிப்புட்:

பல்வேறு இன, மத மக்களை ஒரே இடத்தில் ஒன்றிணைத்து, நல்லிணக்கம் மற்றும் சமூக ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் சுங்கை சிப்புட் இந்திய முஸ்லிம் பள்ளிவாசல் மகளிர் பிரிவு ஏற்பாடு செய்திருந்த அஷூரா கஞ்சி சமைக்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

கடந்த எட்டு ஆண்டுகளாக தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் இந்நிகழ்ச்சி, மத வேறுபாடுகளைத் தாண்டி மனிதநேயத்தையும், சகோதரத்துவ உணர்வையும் வலுப்படுத்தும் சமூக நிகழ்வாக வளர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் இந்து சங்கம், கிறிஸ்தவ அமைப்புகள், பல்வேறு அரசு சாரா அமைப்புகள், போலீஸ் துறை, பேரா மாநிலத்தின் பல்வேறு பள்ளிவாசல்கள், மத்ரஸாக்கள் மற்றும் பொதுமக்கள் என அனைத்து இன, மதத்தைச் சேர்ந்தவர்களும் ஆர்வத்துடன் பங்கேற்று அஷூரா கஞ்சி தயாரிப்பில் இணைந்து செயல்பட்டனர்.

நிகழ்ச்சிக்காக மூன்று பெரிய பானைகளில் அஷூரா கஞ்சி சமைக்கப்பட்டு, ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அன்புடன் வழங்கப்பட்டது.

மலாய், சீனர், இந்தியர் உள்ளிட்ட பல்வேறு இனத்தவர்கள் தோளோடு தோள் நின்று இணைந்து பணியாற்றிய காட்சி, மலேசியாவின் பல்லின ஒற்றுமை மற்றும் பரஸ்பர மரியாதையின் சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்தது.

பள்ளிவாசல் செயலாளர் ஜமால்தீன் அலி பேசுகையில், சுங்கை சிப்புட் மக்களின் ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை உலகிற்கு எடுத்துக்காட்டும் வகையில் இந்த நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடைபெற்று வருவதாகக் குறிப்பிட்டார்.

நிகழ்ச்சியின் வெற்றிக்கு பங்களித்த அனைத்து அமைப்புகள், தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்களுக்கும் அவர் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார்.

ருக்குன் தெத்தாங்கா தலைவர் (KRT) தலைவர் லோகநாதன் வடிவேலு தனது உரையில், பள்ளிவாசல் நிர்வாகம் வழங்கிய ஒத்துழைப்பிற்கும், ஒன்றிணைந்து பணியாற்றிய அனைத்து சமூக அமைப்புகள், தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்களுக்கும் நன்றி தெரிவித்தார்.

இன, மத வேறுபாடுகளை மறந்து அனைவரையும் ஒரே மேடையில் இணைக்கும் இத்தகைய சமூக முயற்சிகள் நாட்டின் ஒற்றுமையை மேலும் வலுப்படுத்தும் என்றும் அவர் கூறினார்.

பள்ளிவாசல் மகளிர் பிரிவு பிரதிநிதி ரம்லா பீவி கூறுகையில், “இந்த ஆண்டு எட்டாவது ஆண்டாக அஷூரா கஞ்சி நிகழ்ச்சியை நடத்தி வருகிறோம்.

ஒவ்வொரு ஆண்டும் அனைத்து சமூக மக்களையும் அழைத்து, ஒற்றுமையுடனும் நல்லிணக்கத்துடனும் இந்த நிகழ்வை நடத்தி வருவது எங்களுக்கு பெருமையையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது.

இந்த நல்லிணக்கப் பயணம் தொடர்ந்து பல ஆண்டுகள் நீடிக்க வேண்டும் என்பதே எங்களது விருப்பம்,” என்றார்.

spot_img

latest articles

explore more