லண்டன், ஜன.9 –
2017/18 ஆம் பருவத்துக்கான இங்கிலாந்து எப்.ஏ கிண்ண கால்பந்து போட்டியின் நான்காவது சுற்றுக்கு பிரைடன் ஹோவ் அல்பியோன் அணி தகுதி பெற்றுள்ளது. திங்கட்கிழமை நடந்த மூன்றாம் சுற்று ஆட்டத்தில் பிரைடன் 2 – 1 என்ற கோல்களில் கிறிஸ்டல் பேலஸ் அணியை வீழ்த்தியது.
இந்த ஆட்டத்தில் முதல் முறையாக இங்கிலாந்தில் வீடியோ துணை நடுவர் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது.எனினும் அந்த தொழில்நுட்பத்தின் மூலமாக நடுவர் எந்தவொரு முடிவையும் மாற்றி கொள்ளவில்லை.

25 ஆவது நிமிடத்தில் டாலே ஸ்டெபன்ஸ் போட்ட கோலின் மூலம் பிரைடன் 1 – 0 என்ற கோலில் முன்னணிக்கு சென்றது.எனினும் இரண்டாம் பாதியில் பாக்கரி சாகோ போட்ட கோலின் மூலம் கிறிஸ்டல் பேலஸ் ஆட்டத்தை சமப்படுத்தியது.
87 ஆவது நிமிடத்தில் கிலேன் முர்ரே போட்ட கோல், பிரைடன் அணிக்கு வெற்றியைத் தேடி தந்தது. அந்த கோல் குறித்து கிறிஸ்டல் பேலஸ் ஆட்டக்காரர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினாலும் வீடியோ துணை நடுவர் தொழில்நுட்பத்தின் மூலம் நடுவரின் முடிவு சரியானது என்பது உறுதிப்படுத்தப்பட்டது.

இந்த வெற்றியின் மூலம் நான்காவது சுற்றில் கால் பதித்துள்ள பிரைடன் அணி, மிடேல்ஸ்புரோ அணியை சந்திக்கவிருக்கிறது.


