கோலாலம்பூர், மார்ச்.9 –
சிலாங்கூர் மாநிலத்தில் கோல சிலாங்கூரில் கட்டப்படும் கோல்பீல்ட் தோட்டத் தமிழ்ப்பள்ளி, தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கான ஆசிரமம் குறித்து சிலாங்கூர் மாநிலத்தின் பாக்காத்தான் அரசாங்கம் இன்னும் மூன்று நாட்களுக்குள் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என ம.இ.கா இளைஞர் பிரிவு சவால் விடுத்துள்ளது.
இந்த திட்டங்களில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டிருப்பதால் சிலாங்கூர் அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகள் வெறும் வெற்று வாக்குறுதிகளாக மட்டுமே இருப்பதாக ம.இ.கா. இளைஞர் பிரிவின் தகவல் பிரிவுத் தலைவர் பி.புனிதன் தெரிவித்தார். 2012 ஆம் ஆண்டில் அப்போதைய சிலாங்கூர் மந்திரி பெசார், டான்ஸ்ரீ காலிட் இப்ராஹிம், 40 லட்சம் ரிங்கிட் செலவில் கோல்பீல்ட் தமிழ்ப்பள்ளி கட்டப்படும் என அறிவித்திருந்தார்.
18 வகுப்பறைகள், நூலகம், அறிவியல், கணினி கூடங்கள் , சிற்றுண்டி சாலை, 800 பேர் அமரக்கூடிய மண்டபத்துடன் அந்த பள்ளி கட்டப்படும் என காலிட் அப்போது கூறினார். ஆனால் 2016 ஆம் ஆண்டில் சிலாங்கூர் மாநில அரசாங்கம், வெறும் ஆறு வகுப்பறைகள் ,ஆசிரியர் அறை, கணினி கூடம், சிற்றுண்டி சாலை, நூலகம் அமைக்கப்படும் என அறிவித்தது. முன்னர் தெரிவித்திருந்த அதே 40 லட்சம் ரிங்கிட் செலவில் இந்த தமிழ்ப்பள்ளி கட்டப்படும் என மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அஸ்மின் அலி தெரிவித்தார்.
ஆசிரம பள்ளியில் படிக்க வேண்டும் என்ற கோல்பீட்ல் தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளின் கனவும் சிதைந்து விட்டதாக புனிதன் தெரிவித்தார். 3 ஹெக்டர் நிலபரப்பில் 70 லட்சம் ரிங்கிட் செலவில் கோல்பீட்ல் தமிழ்ப்பள்ளிக்கு அருகே ஆசிரமம் அமைக்கப்படும் என காலிட் இப்ராஹிம் உறுதி அளித்தார்.
ஆனால் 2017 ஆம் ஆண்டில் சிலாங்கூர் மாநில அரசாங்கம் தாக்கல் செய்த வரவு செலவுத் திட்டத்தில் அந்த ஆசிரமம் , 40 லட்சம் ரிங்கிட் செலவில் ஷா ஆலாமில் உள்ள மிட்லண்டஸ் தமிழ்ப்பள்ளிக்கு அருகே அமைக்கப்படும் என மந்திரி பெசார் தெரிவித்துள்ளார். அப்படி என்றால் இதற்கு முன் கூறப்பட்ட 70 லட்சம் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு என்னவானது என புனிதன் கேள்வி எழுப்பினார்.
இந்த கேள்விகள் அனைத்திற்கும் சிலாங்கூர் மாநில அரசாங்கம் பதில் சொல்ல வேண்டும் என புனிதன் தெரிவித்தார். இந்த விவகாரம் தொடர்பில் தமது தரப்பு அனைத்து ஆதரங்களையும் திரட்டியுள்ளதாக புனிதன் தெரிவித்தார். இன்னும் மூன்று நாட்களில் சிலாங்கூர் அரசாங்கம் இந்த விவகாரம் தொடர்பில் பதில் அளிக்க வேண்டும். பதில் அளிக்கும் தவறும் பட்சத்தில் ம.இ.கா இளைஞர் பிரிவு அதிரடி நடவடிக்கையில் இறங்கும் என புனிதன் எச்சரித்தார்.


