Homeஅரசியல்அமெரிக்காவின் 25% வரி உயர்வு: அன்வாரின் தோல்வியைக் காட்டுகின்றது! -பாலசுப்ரமணியம் சாடினார்

அமெரிக்காவின் 25% வரி உயர்வு: அன்வாரின் தோல்வியைக் காட்டுகின்றது! -பாலசுப்ரமணியம் சாடினார்

கோலாலம்பூர், ஜூலை 9-

மலேசியாவின் ஏற்றுமதி மீது அமெரிக்கா 25% வரி உயர்வை அறிவித்துள்ளது குறித்து பாஸ் ஆதரவு பேரவை – DHPP வருத்தம் தெரிவித்துள்ளது.

இது பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மடானி அரசாங்கத்தின் பொருளாதார மற்றும் மலேசியா-அமெரிக்கா இடையேயான முக்கிய இருவழி வர்த்தக உறவின் தோல்வியாக கருதப்படுவதாக, அப்பேரவையின் தலைவர் பாலசுப்ரமணியம் நாச்சியப்பன் தெரிவித்தார்.

ஏற்றுமதியை பெரிதும் நம்பியுள்ள ஒரு நாடு என்ற முறையில், மலேசியா வர்த்தக உறவில் மிகவும் தீவிரமாக செயல்பட வேண்டும்.

குறிப்பாக, தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்துவதிலும், பேச்சுவார்த்தை வழிகளை உருவாக்குவதிலும், அமெரிக்கா போன்ற பெரிய வல்லரசுகளிடமிருந்து கடுமையான பதிலடிகளை தவிர்ப்பதிலும் மலேசியா தவறிவிட்டதாக, அவர் குற்றம் சாட்டினார்.

இந்த வரி உயர்வு, அன்வார் மற்றும் மடானி அரசாங்கத்தின் வர்த்தக பதற்றங்களை முன்கூட்டியே கையாளத் தவறியதையும், தொழில் கொள்கைகள் அல்லது புவிசார் அரசியல் தொடர்பான பிரச்சினைகளை தீர்க்கத் தவறியதையும் பிரதிபலிக்கிறது.

மேலும், பொருளாதார உறவு மற்றும் இருதரப்பு உரையாடல்கள் மூலம் பரஸ்பர புரிந்துணர்வை உருவாக்குவதிலும் அரசாங்கத்தின் தோல்வியைக் காண்பிக்கின்றது.

“மலேசியா பெரிய முதலீடுகளை ஈர்க்கிறது, உலக அரங்கில் வரவேற்கப்படுகிறது” என்று பிரதமர் அடிக்கடி கூறிவந்தாலும், அமெரிக்காவின் கடுமையான வரி உயர்வு மலேசியா-அமெரிக்க வர்த்தக உறவு நிலையற்றதாகவும், மரியாதைக்குரிய முக்கிய பங்காளியாக கருதப்படாததாகவும் உள்ளதை வெளிப்படுத்துகிறது.

இது மக்கள் மத்தியில் ஒரு கேள்வியை எழுப்புகிறது: அன்வார் அவரது பேச்சு மற்றும் பிம்பத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கிறாரா, அல்லது பெரிய பொருளாதார வல்லரசுகளுடனான பேச்சுவார்த்தைகளில் உறுதியான முடிவுகளை எட்டுவதில் தோல்வியடைகிறாரா?

அமெரிக்காவிற்கு மேற்கொள்ளப்பட்ட “அலுவல் பயணங்கள்” முதலீடுகளை ஈர்த்ததாக கூறப்பட்டாலும், மலேசிய மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் இத்தகைய நடவடிக்கைகளை தடுக்கத் தவறியது ஏன்?

அமெரிக்காவின் இந்த நடவடிக்கை மலேசியா உலகளாவிய அரங்கில் தன்னை திறம்பட நிலைநிறுத்தத் தவறியதை காட்டுகிறது. இதன் விளைவாக, மக்கள் பாதிப்பை சுமக்க வேண்டியுள்ளதால், அன்வார் தலைமையின் செயல்திறன் குறித்து பெரிய கேள்விகளை எழுப்புகிறது.

ஒரு தனிநபரை மட்டுமே வர்த்தக உறவுகள் சார்ந்திருக்கவில்லை என்றாலும், பிரதமர் மற்றும் நிதி அமைச்சராக, அன்வார் மலேசியாவின் வர்த்தக நிலைத்தன்மையையும் தேசிய நலன்களை பாதுகாப்பதையும் உறுதி செய்ய வேண்டிய பெரும் பொறுப்பை சுமக்கிறார்.

இந்த சூழலில், அமெரிக்காவின் வரி உயர்வு மடானி அரசாங்கத்தின் பொருளாதார உறவின் அணுகுமுறையில் ஒரு முக்கிய தோல்வியாக கருதப்படுவதாக, பாலசுப்ரமணியம் கூறினார்.

spot_img

latest articles

explore more