கோலாலம்பூர், ஜூலை 17-
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப உதவியால் அரசாங்க கிளினிக்குகளில் நோயாளிகளின் காத்திப்பு நேரம் 30 நிமிடங்களுக்குக் குறைக்கப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சர் டத்தோஶ்ரீ ஜுல்கிப்ளி அகமது கூறினார்.
சுகாதார அமைச்சு செயற்கை நுண்ணறிவு சார்ந்த இலக்கவியல் மாற்றங்களைச் செயல்படுத்தி வருவதே இதற்குக் காரணம் என்றார் அமைச்சர்.
இந்த மாற்றத்தின் கீழ் மின்மருத்துவ பதிவுகள் அமைப்பின் முதல் கட்ட நடவடிக்கைகள் முழுமை பெற்றிருப்பதாகக் கூறப்பட்டது.
50 லட்சம் மருந்து வழங்கும் பதிவுகள், 2 கோடி தடுப்பூசி பதிவுகள் மற்றும் 10 லட்சம் பல் சிகிச்சை பதிவுகள் இதன் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜூல்கிப்ளி விவரித்தார் .
நாட்டின் முக்கிய சுகாதார பிரச்சினைகளை செயற்கை நுண்ணறிவு வழி தீர்வு காண சுகாதார அமைச்சும் கூகுளும் இப்போது பரஸ்பர ஒத்துழைப்பை மேற்கொண்டு வருவதாக தலைநகரில் 2025 ஆசியா பொது சுகாதார மாநாட்டைத் தொடக்கி வைத்த பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்தார்.


