கோலாலம்பூர், ஜூலை 17-
மரணமடைந்தோரின் உடல்களை உரியோரிடம் ஒப்படைக்கவும் சவ அடக்கம் செய்யும் தனியார் நிறுவனங்களோடு தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு லாபம் சம்பாதிக்கும் மருத்துவமனை சவக் கிடங்கு ஊழியர்களுக்குக் கடுமையான எச்சரிக்கை விடுக்கப் பட்டிருந்தாலும், அங்கு குண்டர் கும்பல்களின் ஆதிக்கமும் போட்டா போட்டியும் முகம் சுழிக்க வைக்கிறது.
அது பற்றிக் குறிப்பிட்ட முன்னாள் மருத்துவர் ஒருவர், ஒருவர் இறந்த பின்னர் அல்லது இறப்பதற்கு முன்னரே, தாங்கள் தொடர்பு வைத்திருக்கும் சவ அடக்கக் கிரியைகளை மேற்கொள்ளும் நபர்கள் அல்லது நிறுவனங்களுக்குத் தெரிவித்து, கையூட்டு வாங்கும் செயல் அரசு மருத்துவமனைகளில் சர்வ சாதாரணமாக நடப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த சட்டவிரோத குண்டர் கும்பல்கள் மருத்துவமனைகளில் ஒருவர் இறந்த பின்னரும் அல்லது உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கும்போதே, அவசர சிகிச்சைப் பிரிவில், மருத்துவமனை வார்டுகளில் சுற்றித் திரிவதாகவும் ஓர் அரசு அதிகாரி கூறுகிறார்.
அவர்களுக்கு இம்மாதிரியான தகவலைத் தெரிவிக்கும் சவக் கிடங்கு ஊழியர்கள் அதிகமான வருவாயை ஈட்டுவதாகவும் அவர் விவரித்தார்.
இந்தக் குண்டர் கும்பல்கள் பெரும்பாலும் மலாய்க்காரர் அல்லாதோரையே குறி வைத்து பணத்தைப் பறிப்பதாகவும் சொல்லப்படுகிறது.
சில சமயங்களில் ஈமக் காரியங்களில் ஈடுபட்டிருக்கும் குழுக்கள், வட்டாரத்தைக் கைப்பற்றும் நோக்கத்தோடு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டு பிரச்சினைகளை ஏற்படுத்துவதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில சமயங்களில் இறந்தவர்களின் அடையாளத்தைக் காண்பதற்குக் கூட சவக் கிடங்கு ஊழியர்கள் 200 ரிங்கிட் வரை கையூட்டாகப் பெற்றிருப்பதாகப் பாதிக்கப்பட்ட ஒருவர் குறிப்பிட்டார்.
இம்மாதியான செயல்கள் பல்வேறு பிரச்சினைகளை உருவாக்குவதால், அரசும் போலீஸாரும் இந்தக் குண்டர் கும்பல்களின் அராஜகத்தை ஒடுக்க, கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்படுகிறது.
-பொன் முனியாண்டி


