Homeஅரசியல்அரசாங்கத்தில் இடம்பெறாத கட்சிகளை ஒன்றிணைக்கும் PN அணியில் ராமசாமி, வேதமூர்த்தி, சத்தியா, அருட்செல்வன்!

அரசாங்கத்தில் இடம்பெறாத கட்சிகளை ஒன்றிணைக்கும் PN அணியில் ராமசாமி, வேதமூர்த்தி, சத்தியா, அருட்செல்வன்!

கோலாலம்பூர், ஜூலை 19-

அரசாங்கத்தில் அங்கம் வகிக்காத கட்சிகளின் முக்கியத் தலைவர்களுடன் பெரிக்காத்தான் நேஷ்னல் கூட்டணியின் தலைவர் தான் ஸ்ரீ முஹிடின் யாசின் நேற்று மாலை ஒரு வரலாற்றுப் பூர்வமான ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார்.

மலேசிய மக்கள் மற்றும் நாட்டின் நலன்களை மையமாகக் கொண்டு, அரசாங்கம் சாராத கட்சிகளை ஓர் அணியில் ஒருங்கிணைப்பது குறித்து இந்தக் கூட்டத்தில் ஆழமாக விவாதிக்கப்பட்டதாக, தான் ஸ்ரீ முஹிடின் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகளையும் சமநிலைப் பணிகளையும் மேலும் வலுப்படுத்த, இந்த புதிய முயற்சி மேற்கொள்ளப்படுகின்றது.

கூட்டத்தில் பங்கேற்ற அனைத்துத் தலைவர்களும் இந்த முன்மொழிவுக்கு ஒருமித்த ஆதரவை வெளிப்படுத்தினர்.

அவர்கள் முன்வைத்துள்ள பரிந்துரைகளும் கோரிக்கைகளும் பெரிக்காத்தான் நேஷ்னல் கூட்டணியின் அடுத்தக்கூட்டத்தில் விவாதிக்கப்படும் என தான் ஸ்ரீ முஹிடின் அவரது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இக்கூட்டத்தில், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் டத்தோ ஸ்ரீ ஹம்ஸா ஜைனுடின், கெராக்கான் கட்சித் தலைவர் டத்தோ டாக்டர் டொமினிக் லாவ் ஹோ சாய், மலேசிய இந்தியர் மக்கள் கட்சி – MIPP-யின் தலைவர் புனிதன் பரமசிவன், பெஜுவாங் கட்சித் தலைவர் டத்தோ ஸ்ரீ உத்தமா முக்ரிஸ் துன் மகாதீர், புத்ரா கட்சித் தலைவர் டத்தோ படுக்கா டாக்டர் இப்ராஹிம் அலி, மலேசிய சோசலிசக் கட்சி – PSM-மின் துணைத் தலைவர் எஸ். அருட்செல்வன், மூடா கட்சியின் இடைக்காலத் தலைவர் அமீரா ஐஸ்யா, மலேசிய மக்கள் முற்போக்குக் கட்சி – MYPPP-யின் இளைஞர் பிரிவுத் லைவர் சத்தியா சுதாகரன், பெர்ஜாசா கட்சித் தலைவர் ஹாஜி ஜமானி இப்ராஹிம், உரிமை கட்சியின் தலைவர் பேராசிரியர் டாக்டர் பி. ராமசாமி, மலேசிய முன்னேற்றக் கட்சியின் (MAP) தலைவர் பி. வேதமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

 

இந்த முயற்சி, மலேசிய அரசியலில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்குவதற்கான முக்கியமான படியாகக் கருதப்படுகிறது.

படங்கள்: பேஸ்புக், புனிதன் பரமசிவம்

spot_img

latest articles

explore more