Homeசமூகம்தொடர்பு அமைச்சின் செயற்கை நுண்ணறிவு பயிற்சி:ஜூலை 31 வரை 814 பேர் பங்கேற்பு

தொடர்பு அமைச்சின் செயற்கை நுண்ணறிவு பயிற்சி:ஜூலை 31 வரை 814 பேர் பங்கேற்பு

கோலாலம்பூர், ஆக.16-

தொடர்பு அமைச்சு துன் அப்துல் ரசாக் ஒலிபரப்பு மற்றும் தகவல் கழகம் (இப்டார்)வாயிலாக ஊடகவியலாளர்கள் உட்பட பங்கேற்பாளர்களின் ஆற்றலை மேம்படுத்துவதற்காக பல்வேறு பயிற்சிகளை நடத்தியுள்ளது.

இவ்வாண்டு மட்டும் 80 பயிற்சிகளை நடத்தியிருப்பதாகவும் இவற்றில் 1,500 பேர் கலந்து கொண்டு பயனடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப இவ்வாண்டு முழுமையும் 22 செயற்கை நுண்ணறிவு பயிற்சி திட்டங்களை இப்டார் நடத்தியிருப்பதாக தொடர்பு துறை துணையமைச்சர் தியோ நீ சிங் கூறினார்.

இவ்வாண்டு ஜூலை 31 ஆம் தேதி வரை 16 பயிற்சி திட்டங்கள் நடத்தப்பட்டதாகவும் இவற்றின் வாயிலாக 814 பேர் பயனடைந்ததாகவும் விஸ்மா ஜெயபக்தி மண்டபத்தில் மலேசிய தமிழ்ப்பத்திரிகையாளர் சங்கத்தின் 8ஆம் ஆண்டு பொதுக் கூட்டத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்து உரையாற்றியபோது குறிப்பிட்டார்.

தமிழ் ஊடகவியலாளர்களுக்காக கடந்த மார்ச் 3 ஆம் தேதி தொடங்கி 7ஆம் தேதி வரை ‘தமிழ் ஊடக உள்ளடக்கத்தை உருவாக்கும் கற்பனை & படைப்பாற்றல் பயிற்சி நடத்தப்பட்டது.இதில் 18 பேர் பங்கேற்றதாக துணையமைச்சர் சொன்னார்.

இதற்கான பதிவுக்கு ipptar.gov.my. எனும் இணைய அகப்பக்கம் வழி தொடர்பு கொள்ளலாம். இப்பயிற்சிகளில் பங்கேற்று தங்களால் இயன்ற பங்கை மக்களுக்கு ஆற்றும்படி மலேசிய தமிழ்ப்பத்திரிகையாளர் சங்க உறுப்பினர்களை துணையமைச்சர் கேட்டுக் கொண்டார்.

தொடர்ந்து, ஹவானா காசே திட்டம் குறித்து பேசிய துணையமைச்சர், இத்திட்டத்தின் வழி இவ்வாண்டு ஆகஸ்ட் 16 ஆம் தேதி வரை நாடு முழுமையும் 478 ஊடகவியலாளர்கள் பயனடைந்தனர். இவர்களில் 56 பேர் தமிழ் ஊடக நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள். இவர்களுக்காக மொத்தம் 1.3 லட்சம் வெள்ளி நிதி வழங்கப்பட்டதாகச் சொன்னார்.

இத்திட்டத்தின் கீழ் இதுவரை மலேசியத் தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தைச் சேர்ந்த 35 பேருக்கு தலா 3,000 வெள்ளி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் 15 பேருக்கு இந்த நிதியுதவி கிடைக்க ஏதுவாக அதற்கான விண்ணப்பங்களை சங்கத்தின் உதவி தலைவர் காளிதாசன் இளங்கோவன் துணை அமைச்சர் தியோ நீ சிங்கிடம் இக்கூட்டத்தில் நேரடியாக ஒப்படைத்தார்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மடானி அரசாங்கம் நோய் வாய்ப்பட்டிருக்கும் ஊடகவியலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு உதவும் பொருட்டு ஹவானா காசே திட்டத்தை கடந்தாண்டு அமல்படுத்தியது.

மொத்தம் 1 லட்சத்து 5 ஆயிரம் வெள்ளி இதுவரை சங்க உறுப்பினர்களுக்கு கிடைத்துள்ளது.

இத்தருணத்தில் அமைச்சர் பாமி பட்சில், துணை அமைச்சர் தியோ நீ சிங் ஆகியோருக்கு சங்கத்தின் தலைவர் செ. வே. முத்தமிழ் மன்னன் மற்றும் ஹவானா காசே பொறுப்பாளர் காளிதாஸ் இளங்கோவன் தங்களின் நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.

 

spot_img

latest articles

explore more