செராஸ், நவ. 17-
பெற்றோர் இருவரையும் இழந்த பதின்ம வயது பெண்ணின் குடும்பத்திற்கு உதவ முன் வந்துள்ளார் பலாக்கோங் சட்டமன்ற உறுப்பினர் வேய்ன் ஓங் சுன் வேய்.
கீர்த்தனாவின்(19) தாயார் கடந்த 2022 ஆம் ஆண்டு காலமான வேளையில் இவரின் தந்தை இவ்வாண்டு ஆகஸ்டு மாதம் காலமானார்.
இவருக்கு எஸ்பிஎம் தேர்வெழுதும் ஒரு தம்பியும் படிவம் ஒன்றில் பயிலும் ஒரு தங்கையும் உள்ளனர்.
இந்நிலையில் குடும்பத்தைத் தொடர்ந்து வழிநடத்தும் பொறுப்பை மூத்த பிள்ளையான கீர்த்தனா ஏற்க வேண்டியதாயிற்று.
தம்பி, தங்கையின் கல்வி, வாடகை வீட்டு கட்டணம், உணவு என குடும்பத் தேவைகளை நிறைவேற்றுவதற்கு அருகில் உள்ள தொழிற்சாலையில் வேலை செய்யத் தொடங்கினார் கீர்த்தனா .
இவர்களைப் பாதுகாக்கும் மிகப் பெரிய பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலை கீர்த்தனாவிற்கு ஏற்பட்டுள்ளது.
இக்குடும்பத்தின் நிலையைக் கேள்வியுற்ற பலாக்கோங் சட்டமன்ற உறுப்பினர் வேய்ன் ஓங் சுன் இவர்களின் வீட்டிற்கு நேரில் வருகை புரிந்து நிலைமையை கீர்த்தனாவிடமும் அவரின் பெரியம்மாவிடமும் கேட்டறிந்தார்.
இதன் அடிப்படையில் கீர்த்தனாவின் தம்பி மற்றும் தங்கையின் கல்வி மற்றும் போக்குவரத்து கட்டணத்தை ஏற்றுக் கொள்ள முன் வந்தார்.
எக்காரணத்தைக் கொண்டும் இவர்களின் கல்விக்கு இடையூறு ஏற்படக்கூடாது. அதற்குத் தம்மால் இயன்ற உதவிகள் புரியவிருப்பதாக வேய்ன் ஓன் உறுதியளித்தார்.


