Homeசமூகம்சிந்தனை மாற்றமுள்ள நூலாக திருக்குறள் உருவாக்கப்பட வேண்டும்-டத்தோஸ்ரீ சரவணன்

சிந்தனை மாற்றமுள்ள நூலாக திருக்குறள் உருவாக்கப்பட வேண்டும்-டத்தோஸ்ரீ சரவணன்

கோலாலம்பூர், மார்ச் 5-
திருக்குறள் தற்போதைய கால மாற்றத்திற்கு ஏற்ப அமைக்கப்பட வேண்டும் என்று மஇகா தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம் சரவணன் கேட்டுக் கொண்டார்.

2,000 ஆண்டுகளுக்கு முன்பு பனை ஓலையில் எழுதி வைக்கப்பட்ட திருக்குறள் இத்தனை ஆண்டுகள் கடந்தும் இன்று வரை நமது கைகளில் தவழ்ந்து கிடக்கிறது என்றால் உயர்ந்த பொருளை இயற்கை பாதுகாக்கும் என்பதே இங்கு தெளிவாகிறது என்றார் அவர்.

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தமிழனால் இப்படிப்பட்ட நூல் எழுதப்பட்டிருக்கிறது என்றால் இந்தக் கருத்தைத் தெரிவிக்க எத்தனை காலத்திற்கு முன்பே தமிழர்கள் வாழ்ந்திருக்க வேண்டும் என்பதைப் பற்றி நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்று இங்குள்ள மஇகா தலைமையக நேதாஜி மண்டபத்தில் பாவலர் கம்பார் கனிமொழி குப்புசாமி ஐயாவின் “திருக்குறள் எளிய உரை” நூல் வெளியீட்டு விழாவில் தலைமையுரை ஆற்றுகையில் குறிப்பிட்டார்.

மக்கள் உயர் பண்பு நெறிகளை தங்கள் வாழ்வியல் கூறுகளாகக் கொள்வதற்கு வழிகாட்டியாக அமைந்துள்ளது தெய்வப் புலவரின் திருக்குறள். ஆனால், இது தமிழர்களால் இயற்றப்பட்ட காரணத்தினால் சொல்லப்பட்ட மொழி நோக்கி நகர்த்தப்பட்டதே தவிர சொல்லப்பட்ட பொருள் நோக்கி நகர்த்தப்படவில்லை. நூலகத்தில் தமிழ்ப் பிரிவின் கீழ் இந்நூல் இருக்கக் கூடாது .நிர்வாகப் பிரிவின் கீழ் மனோவியல், அரசியல் போன்ற பிரிவுகளின் கீழ் வைக்கப்பட்டிருக்க வேண்டும். அப்படி செய்யப்பட்டிருந்தால் உலகத்தின் அதிகாரம் இன்று தமிழர்களின் கைகளில் இருந்திருக்கும் என்றார்.

அடுத்த தலைமுறையினர் எளிதாகப் புரிந்து கொள்ளும் வகையில் திருக்குறள் எளியவுரை நூலை வெளியீடு செய்துள்ள ஐயா கனிமொழியாரின் முயற்சியைப் பாராட்டிய தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான சரவணன் இவரின் தமிழ்ப் பணி தொடர வாழ்த்தியதோடு இந்நிகழ்ச்சிக்குத் தலைமையேற்பதில் தாம் பெருமை கொள்வதாகவும் குறிப்பிட்டார்.

இசைத் தென்றல் ஐயா நா.மாரியப்பனின் தமிழ் வாழ்த்துடன் இனிதே தொடங்கப்பட்ட கம்பார் கனிமொழியாரின் “திருக்குறள் எளிய உரை” நூல் வெளியீட்டு விழாவில் டத்தின் முனைவர் சரசுவதி உலகன் வரவேற்புரை ஆற்றிய வேளையில் முனைவர் மனோன்மணி தேவி அண்ணாமலை (இணைப் பேராசிரியர்) நூலாசிரியர் பற்றி அறிமுகம் செய்தார்.

தேசிய நிலநிதி கூட்டுறவு சங்க நிர்வாக இயக்குநர் டத்தோ பா.சகாதேவன், முன்னாள் துணையமைச்சர் டான்ஸ்ரீ டத்தோ க.குமரன் ஆகியோரின் சிறப்புரைகளும் அறத்துப்பால் பற்றி திருமதி இராசேசுவரி வெள்ளையன், பொருட்பால் பற்றி சாந்தா காளியப்பன் மற்றும் இன்பத்துப்பால் பற்றி திருமதி வனித்தா தேவி ஆகியோர் வழங்கிய நூலாய்வுகள் நிகழ்ச்சிக்கு மேலும் சிறப்பு சேர்த்தன.

தாம் கற்றதைப் பிறருக்குக் கற்றுத் தருவதை தமது குறிக்கோளாகக் கொண்டிருக்கும் கவிஞர் கனிமொழியார் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக ஆசிரியர்கள், ஆசிரிய மாணவர்கள், தமிழ் ஆர்வலருக்கும் தமிழ் வகுப்புகள், இலக்கண வகுப்புகள், இலக்கிய வகுப்புகள், கவிதைப் பயிலரங்குகள் ஆகியவற்றை நடத்தியுள்ளார்.

2012 ஆம் ஆண்டில் மு.வரதராசனார் பன்னாட்டு மாநாட்டினை ஈப்போவில் நடத்தினார். மறு ஆண்டில் மின்னல் பண்பலையில் ஐந்தாம் படிவக் கவிதை இலக்கிய விளக்கத்தை வழங்கினார்.

தமது 69 ஆவது அகவையில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்ற இவர் வானொலியில் அமுதே தமிழே நிகழ்ச்சி வழி திருக்குறள் தன்முனைப்பு உரை வழங்கியுள்ளார்.

குடும்ப விளக்கு நாடகப் பயிலரங்கு வழி மக்களுக்கு ஆக்கப்பூர்வ படிப்பினைகளை வழங்கிய இவர் மாணவர்களிடையே வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிப்பதில் அதிக அக்கறை காட்டினார்.

மக்களுக்காகப் படைக்கப்பட்ட “திருக்குறள் எளிய உரை” எனும் இந்த நூல் மக்களைச் சென்றடைய .வேண்டும் என்பதே தனது தலையாய நோக்கம் என்று நிகழ்ச்சியில் ஏற்புரை வழங்கியபோது நூலாசிரியர் குறிப்பிட்டார்.

தாம் வகுப்புகளை நடத்துவதற்கு இட வசதியை ஏற்படுத்தித் தந்த டான்ஸ்ரீ குமரன், டத்தோஸ்ரீ சரவணன் ஆகியோரோடு தனது தமிழ்ப்பணிக்கு உற்ற துணையாக இருந்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் கவிஞர் கனிமொழியார் இவ்வேளையில் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

அதே வேளையில், இந்த நூல் வெளியீட்டு விழாவை தமது மாணவர்களோடு சேர்ந்து சிறப்பாக ஏற்பாடு செய்த முனைவர் மனோன்மணி தேவி, நிகழ்ச்சிக்கு வருகை புரிந்த உமா பதிப்பக உரிமையாளர் டத்தோ ஆ. சோதிநாதன் உள்ளிட்ட தமிழ் பெருந்தகையோர், ஆசிரியர்கள், மாணவர்கள், தமிழார்வலர் உள்ளிட்ட வருகையாளர்கள் அனைவருக்கும் நன்றி மலர்களைச் சமர்ப்பித்தார்.

spot_img

latest articles

explore more