கோலாலம்பூர், மார்ச் 20-
இணைய பாதுகாப்பு சட்ட மசோதாவின் வரைவு குறித்த கலந்துரையாடல் தற்போது நடைபெற்று வருகிறது. அது நிறைவு பெற்றதும் அச்சட்ட மசோதா அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படலாம் என்று நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இப்புதிய சட்ட மசோதாவின் உருவாக்கம் குறித்து அமைச்சரவை முடிவு செய்துள்ளதாகவும், அச்சட்டத்தின் தேவைகளை ஆய்வு செய்ய தொடர்பு அமைச்சு மற்றும் பிரதமர் துறையின் சட்ட விவகாரப் பிரிவு ஆகியவற்றுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தொடர்பு துறை துணையமைச்சர் தியோ நீ சிங் கூறினார்.
“புதிய சட்டத்தை ஆய்வு செய்வதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அடுத்தக் கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த மசோதா அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கொண்டு வரப்படலாம்…அதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன” என்று மக்களவையில் கேள்வி பதில் நேரத்தின் போது கூலாய் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் குறிப்பிட்டார்.
“சமூக ஊடகங்களில் பொதுமக்களிடம் இருந்து வரும் புகார்களை முதல் தகவல் அறிக்கையாக உருவாக்குவதுடன், இணையப் பாதுகாப்பு தொடர்பான சட்டத்தை அமல்படுத்த அரசாங்கம் உத்தேசித்துள்ளதா?” என்று மக்களவையில் தும்பாட் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ மும்தாஸ் எம்டி நவி எழுப்பிய கேள்விக்கு தியோ இவ்வாறு பதிலளித்தார்.
இதற்கிடையில், நாட்டில் செயல்படும் அனைத்து சமூக ஊடகத் தள சேவை வழங்குநர்கள், மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் (எம்சிஎம்சி) கீழ் பதிவு செய்யப்பட வேண்டும் என்று அமைச்சு முடிவு செய்துள்ளதா என்பதை மக்களவையில் ஜெம்போல் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஷம்சுல்கஹர் முகமட் டெலியின் வினவினார்.
அக்கேள்விக்கு பதிலளித்த தியோ, இவ்விவகாரம் தொடர்பில் எம்சிஎம்சி அதன் உரிம கட்டமைப்பை நிறைவு செய்யும் பணியில் இருப்பதாக தெரிவித்தார். முன்மொழியப்பட்ட உரிம அமலாக்கம் சமூக ஊடகத் தள சேவைகள் மற்றும் இணைய செய்தி சேவைகளை வழங்குபவர்களை உட்படுத்தியது என்றார்.
சமூக ஊடகத் தளங்கள் மற்றும் இணைய செய்திகளில் தீங்கிழைக்கும் உள்ளடக்கம் அதிகமாக இருப்பதால் இந்த நடவடிக்கை நியாயமானது என்று அவர் கூறினார்.




