கோலாலம்பூர், ஜூலை 3-
இன பாகுபாடின்றி 10ஏ அல்லது அதற்கும் கூடுதலாக ஏ பெற்ற மாணவர்களுக்கு மெட்ரிகுலேஷன் வாய்ப்பு வழங்கப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உத்தரவாதம் அளித்திருப்பதை புக்கிட் காசிங் சட்டமன்ற உறுப்பினர் ரஜீவ் ரிஷாகரன் வரவேற்றுள்ளார்.
எஸ்பிஎம் தேர்வில் சிறப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மெட்ரிகுலேஷன் பயில வாய்ப்புக் கிடைக்காதது குறித்துத் தாம் பல ஆண்டுகளாகக் குரல் எழுப்பி வந்துள்ளதாக ரஜீவ் குறிப்பிட்டார்.
இன, சமய பேதமின்றி பி40 அல்லது அரசாங்க உதவி தொகை பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் எஸ்பிஎம் தேர்வில் 7 அல்லது அதற்கும் கூடுதலாக ஏக்களைப் பெறும் நிலையில் அவர்களுக்கு மெட்ரிகுலேஷன் வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்று அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் டாக்டர் அக்மாலுடன் தாம் கலந்துரையாடலில் ஈடுபட்டதை ரஜீவ் சுட்டிக் காட்டினார்.
இந்த பூமிபுத்ரா மற்றும் பூமிபுத்ரா அல்லாத மாணவர்களுக்கு வழங்கப்படும் கோட்டா நிலைப்பாடு சர்ச்சையை ஏற்படுத்தக்கூடியது என்றார் அவர்.
சிறப்பு தேர்ச்சி பெற்ற பூமிபுத்ரா அல்லாத மாணவர்கள் மெட்ரிகுலேஷன் கல்வி பயில்வதில் ஆண்டுதோறும் பிரச்சனை எழுவது குறித்து ரஜீவ் இதற்கு முன்பு கேள்வி எழுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை கூடிய அமைச்சரவை இவ்விவகாரத்திற்குத் தீர்வு கண்டிருப்பதாகப் பிரதமர் கூறியிருப்பது மன நிறைவையும் மகிழ்ச்சியையும் தருவதாக அறிக்கை ஒன்றின் வழி ரஜீவ் கூறினார்.
சிறப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு அரசாங்கம் எடுத்திருக்கும் இந்த ஆக்கப்பூர்வ முடிவு குறித்துப் பிரதமருக்கு இவ்வேளையில் தாம் நன்றி கூறுவதாகவும் ரஜீவ் மேலும் சொன்னார்.





