Homeசமூகம்இந்திய முஸ்லிம்களின் ‘பூமிபுத்ரா’அந்தஸ்து:  -அரசாங்கத்திடம் கிம்மா தொடர்ந்து முறையிடும்

இந்திய முஸ்லிம்களின் ‘பூமிபுத்ரா’அந்தஸ்து:  -அரசாங்கத்திடம் கிம்மா தொடர்ந்து முறையிடும்

கோலாலம்பூர், ஜன. 15-தங்கள் சமூகம் பல வழிகளில் பாதிப்பை எதிர்நோக்கி வருவதைத் தொடர்ந்து தங்களின் பூமிபுத்ரா அந்தஸ்து குறித்து அரசாங்கத்திடம் தொடர்ந்து கோரிக்கை வைக்கப் போவதாக கிம்மா தேசிய தலைவர் டத்தோஸ்ரீ ஹாஜி சைட் இப்ராகிம் காதர்  திட்டவட்டமாகக் கூறினார்.

அண்மையில் நடைபெற்ற கிம்மா பேராளர்கள் மாநாட்டில் இந்திய முஸ்லிம்களின் பூமிபுத்ரா அந்தஸ்து விவகாரம் குறித்து பேசப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

தங்கள் சமூகத்தினருக்கு பூமிபுத்ரா அந்தஸ்து வழங்கும்படி கோரி பிரதமர், துணைப் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் ஆகியோருக்கு தாங்கள் கடிதம் ஒன்றை அனுப்பியதாகவும் இதற்கு இன்று வரை எந்தவொரு பதிலையும் தாங்கள் பெறவில்லை என்றும் சைட் இப்ராகிம் விவரித்தார்.

“நேற்றைய உச்சமன்ற கூட்டத்தில் மீண்டும் கடிதம் அனுப்புவதற்கு முடிவு செய்யப்பட்டது. இக்கடிதத்திற்கும் பதில் கிடைக்காவிட்டால் அடுத்த மாத இறுதியில் அல்லது நோன்பு பெருநாளுக்குப் பின்னர் புத்ரா ஜெயாவில் பெருந்திரளாகக் கூடி எங்கள் கோரிக்கை அடங்கிய கடிதத்தை பிரதமரிடம் வழங்குவோம் “ என்று இங்கு நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் அவர் பேசினார்.

“இதற்கும் எந்தவொரு பதிலும் கிடைக்காவிட்டால் இவ்விவகாரத்தை நாங்கள் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வோம்” என்றார்.

எங்கள் சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் கியாட் மாராவில் பதியும்போது பூமிபுத்ரா அந்தஸ்து இல்லாத காரணத்தினால் நிராகரிக்கப்படுகின்றனர். பொது பல்கலைக்கழகங்களிலும் இவர்களுக்கு இடம் கிடைப்பதில்லை.

அதே சமயம், தொழில் செய்வோரும் பல பாதிப்புகளைச் சந்தித்து வருவதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

‘பூமிபுத்ரா’ அந்தஸ்து என்பது அரசியல் சாசனத்தில் சொல்லப்பட்ட விஷயம். இதற்கு யாரிடமும் ஒப்புதல் பெறத் தேவையில்லை.ஆகையால், இப்பிரச்னை தீர்க்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

கிம்மாவின் உச்சமன்ற கூட்டத்தில் அம்னோ உச்சமன்ற உறுப்பினராக கிம்மா சார்பில் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன் வைக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.

 

spot_img

latest articles

explore more