Homeசமூகம்பணிப்படை வழி தைப்பூச திருவிழாவில் ஆக்கப்பூர்வ மாற்றங்கள்!  - டாக்டர் குணராஜ் தகவல்

பணிப்படை வழி தைப்பூச திருவிழாவில் ஆக்கப்பூர்வ மாற்றங்கள்!  – டாக்டர் குணராஜ் தகவல்

பெட்டாலிங் ஜெயா, ஜன. 27-

தைப்பூசத் திருவிழாவின்போது ஆலய வளாகங்களில் தூய்மை கட்டிக் காக்கப்படுவதோடு அமைதியும் நிலைநாட்டப்படுவதில் பணிப்படை  மிகப் பெரிய பங்கை ஆற்றி வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.

பல அமைப்புகளை உள்ளடக்கிய பணிப்படை பத்துமலை, கெடா, பினாங்கு போன்ற முக்கிய பகுதிகளில் கொண்டாடப்படும் தைப்பூசத் திருவிழாவில் தூய்மை, கட்டொழுங்கு போன்றவற்றை கடந்த 10 ஆண்டுகளாக மிகச் சிறந்த வகையில் பேணி வந்ததாக இக்குழுவின் ஒருங்கிணைப்பாளரான டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் குறிப்பிட்டார்.

அடுத்த மாதம் கொண்டாடப்படும் தைப்பூச திருவிழாவையொட்டி பாதுகாப்பு அம்சங்களை உறுதிப்படுத்த எல்லா மாவட்ட போலீஸ் தலைவர்களுடன் சந்திப்பை நடத்தியதாக இங்கு நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் அவர் விவரித்தார்.

தைப்பூச திருவிழாவில் பக்தர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அடங்கிய வழிகாட்டியை இந்து சங்கம் கடந்த வாரம் வெளியிட்டுள்ளதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

இந்தப் பணிப்படை பல அரசு சார்பற்ற அமைப்புகளைக் கொண்டது. கிளீன் தைப்பூசம், சுச்சி மலேசியா, இந்து சேவை சங்கம், ருத்ரா தேவி சமாஜ் போன்றவை அவற்றில் அடங்கும் என்றார்.

இவற்றின் கீழ் அர்ப்பணிப்புமிக்க தொண்டூழியர்கள் கால நேரம் பாராது தைப்பூச திருவிழாவில் ஆலய வளாகங்கள் குப்பைக் கூளங்கள் இன்றி தூய்மையாக இருப்பதை உறுதிப்படுத்துவர் என்றார் செந்தோசா சட்டமன்ற உறுப்பினருமான குணராஜ்.

பணிப் படையின் செயல்களைக் கண்டு பொது மக்களும் தாங்கள் சாப்பிட்ட பின்னர் உணவு பாக்கெட்டுகளை அருகில் உள்ள குப்பைத் தொட்டியில் போடத் தொடங்குகின்றனர் என்றார்.

“பொது மக்கள் மத்தியில் நல்ல விழிப்புணர்வு ஏற்பட்டிருப்பதை இதன் வழி காண முடிகிறது. ஆலய வளாக தூய்மை மீது இவர்கள் அக்கறை காட்டுவதைக் காண முடிகிறது “என்று அவர் மேலும் சொன்னார்.

பத்துமலை தேவஸ்தானம் தங்களுக்குப் பேராதரவை வழங்கி வருவதாகவும் அவர்கள் ஆலயத்தின் உள்ளே தூய்மைப் பணிகளை மேற்கொள்ளும் வேளையில் தாங்கள் ஆலய வளாகத்தைச் சுற்றிலும் இப்பணியை மேற்கொள்வதாகக் குறிப்பிட்டார்.

பணிப்படை தொடங்கப்படுவதற்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு தைப்பூச திருவிழாவின்போது பக்தர்கள் பல்வேறு பிரச்சினைகளைச் சந்தித்ததாக இச்செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய இந்து சேவை சங்கத்தைச் சேர்ந்த பார்த்திபன் ராமச்சந்திரன் கூறினார்.

இப்போது அப்பிரச்சினைகள் யாவும் தீர்க்கப்பட்டு சமய நெறிப்படி திருவிழா கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

இது ஒரு சமய விழா. இதற்கேற்ப பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்ற வேண்டும் என்றார் மலேசிய இந்து சங்கத்தைச் சேர்ந்த சந்திரன் பெரியசாமி.

 

spot_img

latest articles

explore more