கோலாலம்பூர், ஜூலை 15-
இலக்கவியல் தொழில்நுட்ப துறை மீதான நம்பிக்கையை வலுப்பெற செய்வதே நவீன இலக்கவியல் உலகிற்கான முக்கிய அம்சம் என்று இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்தார்.
46ஆவது ஆசியான் மாநாட்டை மலேசியா ஏற்று நடத்தும் நிலையில், இலக்கவியல் அமைச்சின் கீழ் ஆசியான் 5ஜி மற்றும் செயல்முறை தொழில்நுட்பம் (5GOT) பாதுகாப்பு மாநாடு 2025 தலைநகரில் மூன்று நாட்களுக்கு நடைபெறுகிறது.
ஆசியாவிலேயே முதன் முறையாக நடைபெறும் இந்த தொழில்நுட்ப மாநாட்டை இலக்கவியல் அமைச்சர் கோபிந் சிங் டியோ இன்று அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.
இலக்கவியல் தொழில்நுட்பம் மீதான நம்பிக்கை என்பது,நவீன இலக்கவியல் உலகத்தின் அடிப்படை கூறு ஆகும்.மலேசிய அரசாங்கம், பொருளாதாரம் மற்றும் சமூகத்தை இலக்கவியல் தொழில்நுட்பத்தை நோக்கி நகர்த்தும் நிலையில்,இலக்கவியல் தொழில்நுட்பம் மீதான நம்பிக்கையை மேலோங்கச் செய்வது அவசியம்.
குறிப்பாக, புதிய தொழில்நுட்பம் மீது மக்கள் நம்பிக்கை கொள்வது அவசியம். அதற்கு வலுவான நடவடிக்கைகளை எடுப்பது தமது கடமை என அமைச்சர் வலியுறுத்தினார்.
இதற்கு முக்கியத் தூண்களாக விளங்கும்இலக்கவியல் உள்கட்டமைப்பு, திட்ட வரைவு மற்றும் இலக்கவியல் சார்ந்த விழிப்புணர்வு கல்வி ஆகியவற்றுக்கு விரிவான அணுகுமுறை தேவை என்றார் அவர்.
ஆசியான் வட்டார டிஜிட்டல் சேவைகளில், இலக்கவியல்மீதான நம்பிக்கையை மேலோங்கச் செய்யும் அணுகுமுறைகளை வரையறுப்பதை நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம். ஆசியானில் 5ஜி மற்றும் செயல்முறை தொழில்நுட்ப பாதுகாப்புக்கான பகிரப்பட்ட கட்டமைப்புகள் மற்றும் வழிகாட்டுதல்களை ஏற்படுத்த அமைச்சு திட்டமிட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.
மேலும், இலக்கவியலில் புதுமை மற்றும் மேம்பாட்டுத் திறனை வளர்க்கும் பொது-தனியார் கூட்டமைப்புகளின் வழி ஆசியான் நாடுகளுக்கிடையே பாதுகாப்பான இணைய சூழலை உருவாக்கவும், பங்குதாரர்களிடையே அது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவும் தாம் முனைப்பு காட்டி வருவதாக அமைச்சர் விவரித்தார்.
இணைய பாதுகாப்பு என்பது இன்றைய நிலையில் முக்கியமான ஒன்று. இலக்கவியல் அமைச்சின் கீழ் இயங்கும் மலேசிய இணைய பாதுகாப்பு நிறுவனத்தின் ஆய்வின்படி 2024 இல் 6,000 க்கும் மேற்பட்ட இணைய மோசடி சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இவற்றில் முக்கியமாக மோசடி, ஊடுருவல்கள் மற்றும் தீங்கிழைக்கும் குறியீடுகள் அடங்கும். கடந்த ஆண்டில் இணைய குற்றங்களால் மலேசியா 1.22 பில்லியன் வெள்ளிக்கு அதிகமான நிதி இழப்பை சந்தித்தது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கவே தாம் இது போன்ற முயற்சி களுக்கு முக்கியத்துவம் வழங்குவதாக அமைச்சர் தெரிவித்தார்.
தவிர, மலேசியர்கள், ஆசியான் வட்டார நாடுகளின் மக்கள் உட்பட அனைவருக்கும் இது தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுவது அவசியம் என்றார்.


