Homeமலேசியா2027ஆம் ஆண்டு இறுதிக்குள் 26,000 அகதிகளைப் பதிவு செய்ய அரசாங்கம் இலக்கு

2027ஆம் ஆண்டு இறுதிக்குள் 26,000 அகதிகளைப் பதிவு செய்ய அரசாங்கம் இலக்கு

கோலாலம்பூர்:

2027ஆம் ஆண்டு இறுதிக்குள் அகதிகள் பதிவு ஆவணத் திட்டத்தின் (DPP) கீழ் சுமார் 26,000 அகதிகளைப் பதிவு செய்ய அரசாங்கம் இலக்கு நிர்ணயித்துள்ளதாக உள்துறை அமைச்சர் சைஃபுதீன் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.

இவ்வாண்டு 6,000 அகதிகளைப் பதிவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த ஆண்டு இந்த எண்ணிக்கையை 20,000 ஆக உயர்த்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் நாடாளுமன்றத்தில் கூறினார்.

மலேசியாவில் சுமார் 2,25,000 அகதிகள் ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான உயர் ஆணையத்தில் (UNHCR) பதிவு செய்யப்பட்டிருந்தாலும், அவர்களின் அடையாளம், இருப்பிடம் மற்றும் பாதுகாப்புச் சோதனை தொடர்பான முழுமையான தகவல்கள் அரசாங்கத்திடம் இல்லை என அவர் குறிப்பிட்டார்.

DPP திட்டத்தின் கீழ் அகதிகள் நேர்காணல், காவல்துறை மற்றும் குடிநுழைவுத் துறை சோதனைகள், உயிரியல் அடையாளப் பதிவு ஆகியவற்றுக்கு உட்படுத்தப்படுவர். இத்திட்டத்தின் முதற்கட்டத்தில் அடையாளம் காணப்பட்ட 4,010 பேரில், 78 மியான்மர் நாட்டவர்கள் அகதிகளாக அங்கீகரிக்கப்பட்டதுடன், 25 பேர் வேலை செய்வதற்குத் தகுதி பெற்றுள்ளனர்.

இதற்கிடையில், உற்பத்தி, தோட்டத் தொழில், விவசாயம், கட்டுமானம் மற்றும் சேவைத் துறைகளில் நிலவும் தொழிலாளர் பற்றாக்குறையைச் சமாளிக்க, பதிவு செய்யப்பட்ட அகதிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்குவது குறித்தும் அரசாங்கம் பரிசீலித்து வருவதாக சைஃபுதீன் தெரிவித்தார்.

மேலும், மியான்மார் நாட்டவர்களைப் பெருமளவில் திரும்ப ஏற்றுக்கொள்வதற்கும், அவர்களைத் திருப்பி அனுப்புவதற்கான செலவுகளை ஏற்றுக்கொள்வதற்கும் மியான்மர் ஒப்புக்கொண்டுள்ளதாக அவர் கூறினார்.

அதேவேளை, அகதிகளைக் கையாளும்போது பொதுமக்கள் சட்டத்தைத் தங்கள் கைகளில் எடுத்துக்கொள்ளாமல், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விவகாரத்தை ஒப்படைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

spot_img

latest articles

explore more