கோலாலம்பூர்:
மூன்றாம் தரப்பு புளொக்செயின் தொழில்நுட்பத்தின் மூலம் MyDigital ID இயங்குவதாக வெளியான தகவலை, அந்த டிஜிட்டல் அடையாளத் தளத்தை நிர்வகிக்கும் MyDigital ID Sdn Bhd நிறுவனம் மறுத்துள்ளது.
நிதியமைச்சர் (இணைக்கப்பட்ட நிறுவனம்) MOF Inc-க்குச் சொந்தமான இந்நிறுவனம், பிரதமர் துறையின் கீழ் செயல்படுவதுடன் தேசிய பாதுகாப்பு மன்றம் மற்றும் தேசிய இணையப் பாதுகாப்பு முகமையின் மேற்பார்வையிலும் இருப்பதாகத் தெரிவித்தது.
மலேசியாவில் டிஜிட்டல் சேவைகளைப் பயன்படுத்தும் மக்களில் 83 விழுக்காட்டினரை, அதாவது 1.4 கோடிக்கும் அதிகமான மலேசியர்களை MyDigital ID பதிவு செய்துள்ளதாகவும், 204 செயலிகள் வழியாக 1,000-க்கும் மேற்பட்ட சேவைகளுடன் இணைத்துள்ளதாகவும் நிறுவனம் குறிப்பிட்டது.
இணையச் சேவைகளில் பயனர்களின் அடையாளத்தைப் பாதுகாப்பாகவும் எளிமையாகவும் சரிபார்க்கும் தளமாக MyDigital ID செயல்படுவதாகவும், இது மைகாட் (MyKad) அடையாள அட்டைக்கு மாற்றாகாது என்றும் விளக்கியது.
மேலும், இணையச் சேவைகளைப் பயன்படுத்தவும் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளவும் ஒரே உள்நுழைவு வசதியை வழங்கும் MyDigital ID, பயனர்களின் தனிப்பட்ட தரவுகளைச் சேமிப்பதில்லை என்றும் நிறுவனம் தெரிவித்தது.


