கோலாலம்பூர்:
சன்வே பிரமிட் வணிக வளாகம், ‘Light in Full Color’ எனும் கருப்பொருளில் தனது 29ஆவது தீபாவளிக் கொண்டாட்டத்தை இன்று (அக்டோபர் 16) வணிக வளாகத்தின் தரைத்தளத்திலுள்ள கிராண்ட் ஃபோயரில் தொடங்கியது.
தொடக்க நிகழ்ச்சியில் சன்வே பிரமிட் வணிக வளாகத்தின் மூத்த மேலாளர் ஜெசிக்கா, அங்கு திரண்டிருந்த விருந்தினர்களையும் பார்வையாளர்களையும் வரவேற்றார். இந்த ஆண்டு 29ஆவது முறையாக தீபாவளிக் கொண்டாட்டத்தை முன்னெடுக்கும் சன்வே பிரமிட், அடுத்த ஆண்டு தனது 30ஆவது ஆண்டு தீபாவளிக் கொண்டாட்டத்தை நடத்தவுள்ளது.
அக்டோபர் 16ஆம் தேதி முதல் நவம்பர் 15ஆம் தேதி வரை நடைபெறும் இக்கொண்டாட்டத்தில், தீபாவளியின் வண்ணமயமான மரபுகளையும் இந்தியக் கலாசாரத்தையும் வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு அலங்காரங்கள் மற்றும் ஒளிரும் அகல் விளக்குகள் இடம்பெற்றுள்ளன.
மேலும், பாரம்பரிய இந்திய ஆடைகளை அணிந்து புகைப்படங்கள் எடுத்துக்கொள்ளும் அனுபவத்தையும் பார்வையாளர்கள் பெறலாம். இந்தியக் கலாசார நடன நிகழ்ச்சிகள் நவம்பர் 1, 8 மற்றும் 9ஆம் தேதிகளில் நண்பகல் 12 மணிக்கு நடைபெறவுள்ளன.
இதனிடையே, ஒரே நாளில் வழங்கப்பட்ட இரண்டு ரசீதுகளில் குறைந்தபட்சம் RM350 செலவிடும் வாடிக்கையாளர்கள், GODIVA சாக்லேட் கோல்ட் பரிசுப் பெட்டி மற்றும் 400 கிராம் ஜாஸ்மின் புசாகிரீம் பாஸ்மதி அரிசி ஆகியவற்றைப் பரிசாகப் பெறலாம். இச்சலுகை விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டதுடன், இருப்பு உள்ளவரை மட்டுமே வழங்கப்படும்.
‘Light in Full Color’ என்ற கருப்பொருளிலான இக்கொண்டாட்டம், தீபாவளியின் மகிழ்ச்சி, இந்தியக் கலாசாரம் மற்றும் சமூக ஒற்றுமையைப் பறைசாற்றும் வகையில் அமைந்துள்ளது.
இந்தக் கொண்டாட்டம் நவம்பர் 15ஆம் தேதி வரை சிலாங்கூர், பந்தார் சன்வேயில் அமைந்துள்ள சன்வே பிரமிட் வணிக வளாகத்தில் நடைபெறும்.


