செபராங் பிறை, நவ.9-
இங்குள்ள  ராஜா ஊடா, வோலே கார் நிறுத்துமிடத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட ஜசெகவின் விழா மற்றும் நடவடிக்கை சேவை மையத்தின் திறப்பு விழாவிற்கான தற்காலிக கூடாரத்திற்கு செபராங் பிறை மாநகர் மன்றத்திடமிருந்து (எம்பிஎஸ்பி) அனுமதி பெறப்பட்டதா என்பது குறித்து விளக்கமளிக்கும்படி முன்னாள் பாகான் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் குவாங் எங் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்.

கூடாரம் அமைத்து மேற்கொள்ளப்படும் எந்தவொரு நடவடிக்கைக்கும் அனுமதி கோரி விண்ணப்பிக்க வேண்டும் என்று எம்பிஎஸ்பி நிபந்தனை விதித்துள்ளது. இந்நிலையில் ஜசெகவின் விழா மற்றும் நடவடிக்கை சேவை மையத்தின் திறப்பு விழாவிற்கான தற்காலிக கூடாரம் சில தினங்களுக்கு அமைக்கப்பட்டிருந்தது. இதற்கு எம்பிஎஸ்பி அனுமதி வழங்கியதா? அந்த சில தினங்களுக்கான தற்காலிக கூடார அனுமதிக்கான செலவு எவ்வளவு என்று லிம் குவாங் எங்கிடம் பட்டர்வொர்த், போதி தர்மா பக்தர்கள் அமைப்பின் தலைவர் டான் சுவான் ஹோங் வினவினார்.

“ பொது மக்கள் இதற்கு அவசியம் விண்ணப்பம் செய்வதோடு  தங்கள் நடவடிக்கைகளுக்கு கட்டணமும் செலுத்த வேண்டும். இதில் இரட்டைப் போக்கு கடைபிடிக்கப்படுவதோ அல்லது அரசாங்கத்தின் வளங்களை துஷ்பிரயோகம் செய்வதோ கூடாது. தங்களின் அனுமதியை அவர்கள் நேர்மையான வழியில் காட்டுவர் என்று நான் நம்புகிறேன்” என்று தாமான் மெஸ்ராவில் பட்டர்வொர்த்  போதி தர்மா பக்தர்கள் அமைப்பின் இரவு விருந்து நிகழ்ச்சியில் உரை நிகழ்த்துகையில்  குறிப்பிட்டார்.

அதே வேளையில், பட்டர்வொர்த் அரேனா (முன்பு டேவான் பங்கெட் அம்பாங் ஜாஜார் என்று அழைக்கப்பட்டது) கட்டப்படும்போது இங்கு ஹலால் அல்லாத உணவு தயார் செய்யலாம் என்று லிம் குவான் எங் கூறியிருந்தார். ஆனால், இப்போதோ இங்கு ஹலால் உணவை மட்டுமே சமைக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டது. இவ்விவகாரம் குறித்தும் அவர் விளக்கமளிக்க வேண்டும் என்று டான் சுவான் ஹோங் கேட்டுக் கொண்டார்.

இந்த மண்டபத்தில் திருமண விருந்து நடத்தத் திட்டமிடுவோர் அதன் பொறுப்பாளர்களைத் தொடர்பு கொண்டபோது அங்கு ஹலால் உணவை மட்டுமே சமைக்க முடியும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

இதனிடையே,  பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தின் 22 மாத ஆட்சி காலத்தில் என்ன நடந்தது என்பதை பாகான் வாக்காளர்கள் அறிவர் என்று தான் நம்புவதாகக் குறிப்பிட்ட டான் சுவான் ஹோங் ,நாடாளுமன்றத்தில் மக்களின் பிரச்சினைகள் தொட்டு கேள்வி எழுப்பக்கூடிய மக்கள் பிரதிநிதியைத் தேர்ந்தெடுக்கும் வகையில் இப்பொதுத் தேர்தலில் கவனமுடன் வாக்களிக்கும்படி அவர்களைக் கேட்டுக் கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் பட்டர்வொர்த், போதி தர்மா ஆலயம் சொங் வா 2 சீனப்பள்ளிக்கு 1,000 வெள்ளி நன்கொடை வழங்கியது.