கோலாலம்பூர், மார்ச் 3-
தமது பதவியைத் துஷ்பிரயோகம் செய்து 1எம்டிபி கணக்கறிக்கையை மாற்றியமைத்ததாக தம் மீது கொண்டு வரப்பட்ட குற்றச்சாட்டில் இருந்து முன்னாள் பிரதமர் நஜீப் துன் ரசாக்கை இங்குள்ள உயர்நீதிமன்றம் விடுவித்தது.
நஜீப்புடன் சேர்ந்து இந்தக் கணக்கறிக்கையை மாற்றியதாகச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டில் இருந்து 1எம்டிபி முன்னாள் தலைமை செயல்முறை அதிகாரி அருள் கந்தா கந்தசாமியையும் நீதிமன்றம் விடுவித்தது.
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எஸ்பிஆர்எம்) செக்ஷன் 23 இன் கீழ் நஜீப்பிற்கு எதிராக போதிய முகாம்திரங்களைக் காட்ட அரசு தரப்பு தவறிவிட்டதாக நீதிபதி ஜைனி மஸ்லான் தெரிவித்தார்.
இவ்வழக்கு மீதான விசாரணை கடந்த 2019 நவம்பர் 18 ஆம் தேதி தொடங்கப்பட்டது.
முன்னாள் அரசாங்க தலைமைச் செயலாளர் மறைந்த அலி ஹம்சா உட்பட 16 சாட்சிகள் அழைக்கப்பட்டதைத் தொடர்ந்து இவ்வழக்கை அரசு தரப்பு கடந்த 2022 செப்டம்பர் 7 ஆம் தேதி நிறைவு செய்தது.
முன்னாள் தலைமை கணக்காய்வாளர்கள் அம்ரின் புவாங் மற்றும் டாக்டர் மடினா முகமது, முன்னாள் 1எம்டிபி தலைவர் பாக்கி சாலே மற்றும் முன்னாள் தேசிய கணக்காய்வாளர் இலாகா இயக்குநர் சாடாதுல் நஃபிசா பாஷீர் அகமது ஆகியோரும் இவ்வழக்கில் சாட்சிக்கு அழைக்கப்பட்டவர்களில் அடங்குவர்.
முன்னதாக, தனது தரப்பில் சாட்சியமளிக்க அருள் கந்தாவை அழைக்கும் அரசு தரப்பின் விண்ணப்பத்திற்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது.
1எம்டிபி இறுதி கணக்கறிக்கை பொது கணக்கு குழு (பிஏசி) கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்பு தமது பதவியைப் பயன்படுத்தி அதனை மாற்றியமைத்ததாக நஜீப் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
இக்குற்றத்தைப் புரிவதற்கு நஜீப்பிற்கு உடந்தையாக இருந்ததாக அருள் கந்தாவிற்கு எதிராக குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டது.
கடந்த 2016 பிப்ரவரி 22 ஆம் தேதிக்கும் 26 ஆம் தேதிக்கும் இடையே புத்ராஜெயாவில் உள்ள பிரதமர் துறையில் இவர்கள் இக்குற்றத்தைப் புரிந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
-ஃபிரி மலேசியா டுடே


