பெட்டாலிங் ஜெயா, மார்ச் 25-

ஜூன் மாதத்திற்குப் பின்னர் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படும்  மாநில தேர்தலில் தான் வேட்பாளராக நியமிக்கப்படப் போவதில்லை என்று நாளேடு ஒன்றில் வெளியான செய்தி தமக்கு வியப்பை ஏற்படுத்தியிருப்பதாக பினாங்கு துணை முதல்வர் இராமசாமி தெரிவித்தார்.

தாம் மேலும் ஒரு தவணைக்கு கட்சிக்காகச் சேவையாற்ற விரும்பும் வேளையில் அந்த நாளேட்டுக்கு இப்படியொரு தகவல் எங்கிருந்து கிடைத்தது என்பது புரியவில்லை என்றார் ஜசெகவின் பிறை சட்டமன்ற உறுப்பினரான அவர்.

தகுதியான வேட்பாளர்கள் பட்டியல் மாநில ஜசெகவினால் கட்சியின் மத்திய தலைமைத்துவத்திற்கு இன்னும் சமர்க்கப்படவில்லை என்றார் அவர் .

“நான் கட்சிக்காக மேலும் ஒரு தவணைக்குச் சேவையாற்ற விரும்புகிறேன். இதனை வெளிப்படையாகக் கூறியிருக்கிறேன்”

“யாரும் பதவியில் நிரந்தரமாக இருக்கப் போவதில்லை. நான் கட்சியிடமே முடிவை விட்டுவிடுகிறேன்” என்று எஃப்எம்டியிடம் அவர் விவரித்தார்.

துணை முதல்வர் இராமசாமி அதிகாரப்பூர்வ அலுவல் காரணமாக மாநில பேராளர்கள் குழுவிற்குத் தலைமையேற்று தற்போது நெதர்லாந்தில் உள்ளார்.

ஜசெக புது முகங்களைக் கொண்டு வர திட்டமிட்டிருப்பதால் மாநில தேர்தலில் போட்டியிடுவதினின்று விலகிக் கொள்ளும்படி பேராசிரியர் இராமசாமி  கேட்டுக் கொள்ளப்படலாம் என்று தி ஸ்டார் புதன்கிழமை செய்தி வெளியிட்டது.