கோலாலம்பூர், டிச.27-
தலைநகரில் ஊராட்சித் தேர்தலை நடத்துவதற்கான பரிந்துரையை பற்றி கருத்துரைத்த போது கூட்டரசு பிரதேச பாஸ் ஆணையர் அஸார் யாஹ்யாவின் அறிக்கை இனத்துவேசமாக இருந்தது தொடர்பில் கூட்டரசு பிரதேச பி.கே.ஆர். போலீசில் புகார் செய்ததாக அதன் இளைஞர் பிரிவு தலைவர் முகமட் அஸ்பார் அஸா அஸார் தெரிவித்தார்.
இந்த ஊராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு சிலர் இணக்கம் தெரிவித்த வேளையில், மேலும் சிலர் மறுத்ததும் நமக்குத் தெரியும். இருந்த போதிலும் மலாய்க்காரர்கள் அல்லாதோர் பெரும்பான்மையினராக வாழும் பகுதிகளாக லெம்பா பந்தாய், பண்டார் துன் ரசாக் நாடாளுமன்றத் தொகுதிகள் இருப்பதாக தவறானக் கூற்றை வெளிப்படுத்தியிருக்கிறார் என்று தலைநகர், ஸ்தாப்பாக் போலீஸ் நிலையத்தில் புகார் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது முகமட் அஸ்பார் குறிப்பிட்டார்.
இந்த போலீஸ் புகார் செய்வதற்கு வங்சா மாஜு பி.கே.ஆர். தொகுதி தலைவரும் கூட்டரசு பிரதேச பி.கே.ஆர். தலைமைத்துவ மன்றத்தின் உதவித் தலைவருமான என்றி லாயும் வந்திருந்தார்.
முன்னதாக தலைநகரில் ஊராட்சித் தேர்தலை நடத்தினால் அங்கு சீனர்களின் ஆதிக்கம் நிலவும் என்று அஸார் யாஹ்யா ஓர் அறிக்கையில் குறிப்பிட்டார்.




