spot_img
13.9 C
London
spot_img
Home சமூகம் ஆட்டிஸம் குழந்தைகளின் பெற்றோர்களுக்கு உறுதுணையாக இருப்போம்! -ஜோனாதன் வேலா வலியுறுத்து

ஆட்டிஸம் குழந்தைகளின் பெற்றோர்களுக்கு உறுதுணையாக இருப்போம்! -ஜோனாதன் வேலா வலியுறுத்து

0
307

கோலாலம்பூர், மே 26-

வேதனை மற்றும் விரக்தியில் இருக்கும் ஆட்டிஸம் குழந்தைகளின் பெற்றோர்களுக்கு சமூகத்தினர் எப்போதும் பக்க பலமாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

ஆட்டிஸம் குழந்தைகளைப் பராமரிப்பது சாதாரண விஷயம் அல்ல. அவர்களைக் கண்காணித்து அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் பெற்றோர்கள் பெரும் சவால்களை எதிர்கொள்கின்றனர். ஆகையால் அவர்களுக்கு நம்மால் இயன்ற உதவிகளை செய்ய முன்வர வேண்டும் என்று பிரதமரின் அரசியல் செயலாளரின் உதவியாளர் ஜோனாதன் வேலா கேட்டுக் கொண்டார்.

தங்களின் பிள்ளைகளை கவனிப்பதற்காக இரவு நேரங்களில் போதிய உறக்கம் இன்றியும் மனதில் பல போராட்டங்களோடும் கடந்து வரும் பெற்றோர்களின் இன்னல்களை சமூகம் புரிந்து கொள்ள வேண்டும் என்று இங்கு நடைபெற்ற ஜனனம் 4.0 நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றுகையில் குறிப்பிட்டார்.

இக்குழந்தைகளின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு இந்த உன்னத நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த திலா லட்சுமணனை ஜோனாதன் வேலா வெகுவாகப் பாராட்டினார்.

இந்நிகழ்ச்சிக்கு வருகை புரிந்த அனைவரையும் வரவேற்று பேசிய திலா லட்சுமணன், இதன் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த பெற்றோர்கள் மற்றும் ஆதரவாளர்கள் உட்பட அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி தெரிவித்தார்

குகேந்திரன் தங்கதுரையின் ‘தாயும் நீயே’ என்ற மனதைக் கவரும் பாடலுடன் தொடங்கிய ஆட்டிஸம் நட்சத்திரங்களின் பட்டியலில் நூர் சுஹைபா, கைலாஷ், சஞ்சனா, தேஜல் உமா, சஞ்சீவ் மற்றும் ஜோயி ஜோஷ்வா ஆகியோர் இடம் பெற்றனர்.

இவர்களின் படைப்புகள் வந்திருந்தவர்களின் இதயங்களைத் தொட்டது அவர்களின் கைதட்டல் வழி புலப்பட்டது.

அடுத்து, ரோஸ் வெரோனிகாவின் ‘ கற்பூர பொம்மை ஒன்று ‘பாடல் நிகழ்ச்சிக்கு மேலும் மெருகூட்டியது.

நிகழ்ச்சியின் ஆதரவாளர்களை அங்கீகரிக்கும் நிகழ்வைத் தொடர்ந்து இடம் பெற்ற நாடகம், இக்குழந்தைகளின் பெற்றோர்கள் தங்கள் வாழ்வில் படும் அன்றாட வலியையும் போராட்டத்தையும் எடுத்துக்காட்டியது.

சுருங்கக் கூறின், ஜனனம் 4.0 நிகழ்ச்சிக்கு முத்தாய்ப்பாக அமைந்த அங்கம் இது என்றால் மிகையாகாது.