கோலாலம்பூர், ஜூலை 8-
சமூகம், கல்வி, பொருளாதாரம் என இந்தியர்களின் நலங்களுக்காக மஇகா முன்னெடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் தோள் கொடுக்கத் தான் தயாராக இருப்பதாக டத்தோ சு.தமிழ்வாணன் தெரிவித்தார்.
இதன் பொருட்டு டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் – டத்தோஸ்ரீ எம்.சரவணன் தலைமையில் சீரிய முறையில் இயங்கி வரும் மஇகா வலுப்பெற்று கம்பீர தோற்றம் காண தன்னால் இயன்ற ஒத்துழைப்பை வழங்கவிருப்பதாக கட்சியின் அண்மைய தேர்தலில் மத்திய செயலவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்வாணன் குறிப்பிட்டார்.
இளைஞர் பிரிவில் இருக்கும் போது இரு தவணைகள் மத்திய செலவைக்குப் போட்டியிட்டு வென்றதாகக் குறிப்பிட்ட அவர், இது நான்காவது தடவையாக தான் போட்டியிட்டு வெற்றி பெற்றதாகச் சொன்னார்.

கிளைத் தலைவர்கள், உறுப்பினர்கள் என தனக்கு ஆதரவு வழங்கி வெற்றி பெறச் செய்த அனைவருக்கும் இவ்வேளையில் நன்றி தெரிவித்துக் கொண்டார் மஇகா மூவார் டிவிஷன் ஒருங்கிணைப்பாளருமான தமிழ்வாணன்.
“எனக்கு இப்போது வயது 42. எனது மஇகா அரசியல் பயணம் நான் 18 வயதாக இருக்கும்போது தொடங்கியது. டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் உட்பட பல இளைஞர் பிரிவு தலைவர்களின் தலைமைத்துவத்தின் கீழ் பணியாற்றியுள்ளேன்” என்று அறிக்கை ஒன்றின் வழி அவர் விவரித்தார்.
“இப்பொறுப்பு வகிக்கும் காலத்தில் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் மற்றும் டத்தோஸ்ரீ எம்.சரவணன் இருவரின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக நான் நடந்து கொள்வேன்”.

“நான்கு தவணைகள் மத்திய செயலவை உறுப்பினராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு அனைவரின் ஆசீர்வாதமே காரணம்” என்றார் மூவார் நகராண்மைக் கழக உறுப்பினரான தமிழ்வாணன்.