சுபாங் ஜெயா, ஜூலை 9-
இணைய பகடிவதையில் கடந்த வாரம் சம்பந்தப்படுத்தப்பட்ட டிக் டாக் படைப்பாளர் ஒருவரின் மரணத்திற்குக் காரணமான பகடிவதையாளரால் இரண்டு செய்தியாளர்களும் பாதிக்கப்பட்டிருப்பதாக அறியப்படுகிறது.
ஏஷா என்ற ராஜேஸ்வரி, (வயது 29) மரணமுற்றதையடுத்து சம்பந்தப்பட்ட பகடிவதையாளர் போலி கணக்கைப் பயன்படுத்தியிருப்பது குறித்து அவ்விரு செய்தியாளர்களும் தம்மைத் தொடர்பு கொண்டு தெரியப்படுத்தியதாகத் தொடர்பு துறை அமைச்சர் ஃபாமி ஃபாட்சில் தெரிவித்தார்.
பகடிவதையாளர்கள் பொதுவாக வசிக்குமிடம், குடும்ப உறுப்பினர்களின் புகைப்படங்களை எடுத்து வைத்துக் கொண்டு மிரட்டுவர் என்பதால் அவர்கள் இருவரும் மிகவும் பயந்து விட்டார்கள். ஒருசில பகடிவதையாளர்கள் போலி கணக்கில் மறைந்திருக்கக்கூடும்.
“என்னைப் பொறுத்தவரை தைரியமாகப் பேசினால் தைரியமாக எதிர்கொள்ள வேண்டும். போலிக் கணக்கு என்பது ஏதோ முறைகேடான ஒன்று பின்னால் மறைந்திருப்பதைத்தான் காட்டுகிறது. அதை நாம் சரிப்படுத்த வேண்டும்” என்று செல்கோம்டிஜி முனையத்தில் செயற்கை நுண்ணறிவு அனுபவ மையத்தை அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தப் பின்னர் லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினருமான ஃபாமி ஃபாட்சில் செய்தியாளர்களிடம் பேசினார்.





