கோலாலம்பூர், ஜூலை 11-
இணைய பகடிவதை விவகாரம் தொடர்பில் தீர்வு காண சில சட்டப் பிரிவுகளைத் திருத்தம் செய்யும் பரிந்துரையை தொடர்பு துறை அமைச்சு அமைச்சரவையில் முன்வைக்கும் என்று அறியப்படுகிறது.
இணைய சமூகத்தில் மிகவும் வருத்தமளிக்கக்கூடிய பகடிவதைச் சம்பவத்தை எதிர்கொள்வதற்கான உடனடி நடவடிக்கைகளில் இதுவும் அடங்கும் என்று அமைச்சர் ஃபாமி ஃபாட்சில் தெரிவித்தார்.
“நாளைய அமைச்சரவைக் கூட்டத்தில் 3 விவகாரங்களை நான் முன்வைக்கவிருக்கிறேன். முதலாவது தற்போது நாடாளுமன்றக் கூட்டம் நடைபெறுவதால் அதில் நடப்பிலுள்ள சட்டத்தைத் திருத்துவது அல்லது புதிய சட்டத்தை வரைவது, இரண்டாவது இணைய பகடிவதை விவகாரத்திற்கான நிர்வாக அம்சங்கள், இணைய பகடிவதைக் குற்றச்செயலுக்கான சட்ட அம்சங்கள் மற்றும் இணையத்தினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பள்ளி மற்றும் சமூக ரீதியில் விழிப்புணர்வை ஏற்படுத்துதல் ஆகியவையாகும் என்று நாடாளுமன்றத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினருமான ஃபாமி ஃபாட்சில் பேசினார்.
-பெர்னாமா





