Homeசமூகம்உயிரின் மதிப்பு வெறும் 100 வெள்ளிதானா? - மஇகா மகளிர் பிரிவு தலைவி சரஸ்வதி அதிருப்தி

உயிரின் மதிப்பு வெறும் 100 வெள்ளிதானா? – மஇகா மகளிர் பிரிவு தலைவி சரஸ்வதி அதிருப்தி

கோலாலம்பூர், ஜூலை 16-
மறைந்த இஷா என்ற ராஜேஸ்வரிக்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றத்திற்கு நியாயமான தண்டனை விதிக்கப்படவில்லை என்று மஇகா தேசிய மகளிர் பிரிவு தலைவி சரஸ்வதி நல்லதம்பி பெரும் அதிருப்தி தெரிவித்தார்.

இந்த இணைய பகடி வதை சம்பவத்தில் ஈடுபட்டதாக 1955ஆம் ஆண்டு சிறு குற்றச் செயல்கள் 14 ஆவது சட்டப் பிரிவின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்ட ‘அல்பா குயின்’ என்ற பி. ஷாலினிக்கு தண்டனையாக வெறும் 100 வெள்ளி மட்டுமே விதிக்கப்பட்டது எவ்விதத்தில் நியாயம் என்று அவர் வினவினார்.

பாதிக்கப்பட்டவர் இறுதியில் தனது உயிரைப் பறிகொடுக்கும் அளவுக்குப் புரிந்த குற்றச் செயலுடன் ஒப்பிடுகையில் இந்தத் தண்டனை மிகவும் குறைவானது என்றார்.

“இது நியாயமற்ற தண்டனை. பகடி வதையால் பாதிக்கப்பட்டவர் இறுதியில் எத்தகைய விளைவைச் சந்தித்தார் என்பதை இந்த தண்டனை சிறிதும் பிரதிபலிக்கவில்லை”.

“பகடி வதை ஒருவரின் மனதை வெகுவாகப் பாதித்துவிடும். இதனால் ஏற்படும் மன அழுத்தம் சில வேளைகளில் இன்று நாம் காணும் மரண சம்பவத்திற்கும் இட்டுச் செல்லும். ஆகையால், பாதிக்கப்பட்டவரின் உயிரின் மதிப்பு வெறும் 100 வெள்ளிதானா என்று அறிக்கை ஒன்றின் வழி அவர் வினவினார்.

இணைய பகடி வதை சம்பவங்களில் ஈடுபடுவோருக்கு எதிராக கடுமையான தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று கெமெலா சட்டமன்ற உறுப்பினரான சரஸ்வதி வலியுறுத்தினார் .

“பகடி வதை சம்பவத்தை நாம் ஒருபோதும் விட்டுக் கொடுக்க முடியாது. இதனைப் புரியும் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை விதிக்கப்பட வேண்டும் “.

இது மற்றவர்களுக்கு ஒரு பாடமாக இருப்பதோடு வருங்காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாதிருப்பதையும் தடுக்கும்.

இதன் பொருட்டு பகடி வதை தொடர்பான சட்ட அம்சங்களை மறு ஆய்வு செய்யும்படி அரசாங்கத்தை மஇகா மகளிர் பிரிவு கேட்டுக் கொள்கிறது என்றார்.

spot_img

latest articles

explore more