Homeசமூகம்பிரம்மாண்ட ஆதித்தன் பொங்கல் விழா!

பிரம்மாண்ட ஆதித்தன் பொங்கல் விழா!

சித்தியவான், ஜன. 21-மலேசிய இந்துதர்ம மாமன்ற பேரா மாநில பேரவையின் தேசிய ஆதித்தன் பொங்கல் விழா சித்தியவான் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

இந்தப் பொங்கல் விழா பசு மற்றும் கன்றுக்குட்டிக்கான கோபூஜையோடு தொடங்கப்பட்டது.. இப்பூஜை சித்தியவான் இஸ்கோன் தலைவர் கோகுலேஷ் பிரபு தலைமையில் நடைபெற்றது.

மலேசிய இந்துதர்ம மாமன்றம் மலேசிய இந்துசங்கம் மற்றும் மாமன்ற இளைஞர் பிரிவினர் ஆகியோர் இணைந்து பொங்கல் வைத்தனர்.

பொங்கல் வைத்த பின்னர் பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் தொடங்கின. சிறுவர்கள், பெரியவர்கள், ஆண்கள், பெண்கள் என எல்லா தரப்பினர்களும் பங்கு கொள்ளும் வகையில் போட்டி விளையாட்டுகள் நடைபெற்றன.

 

உரியடித்தல், கோலம் போடுதல், பூ தொடுத்தல், தண்ணீர் குடத்துடன் நடந்து செல்லுதல், தலையில் கரகம் வைத்து நடந்து செல்லுதல், முறத்தில் கச்சான் புடைத்தல், கைகட்டப்பட்டு வடை சாப்பிடுதல், சாக்கு ஓட்டம், கயிறு இழுத்தல் என 18 வகையான போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டன.

இவ்விழாவை தேசிய ஒற்றுமை துறை துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி உரையாற்றி நிறைவு செய்து வைத்தார்.

அவர் தமதுரையில் மறந்துபோன பல விளையாட்டுகளை மீண்டும் ஞாபகப்படுத்திய விழாவாக இப்பொங்கல் விழா அமைந்துள்ளதாக புகழாரம் சூட்டினார்.

நமது பாரம்பரியங்களை அடுத்த தலைமுறையினருக்குக் கொண்டு சேர்க்க வேண்டியது நமது முக்கிய கடமைகளில் ஒன்று என வலியுறுத்தினார்.

அந்த வகையில் மாமன்றம் ஆற்றிவரும் பணியை வெகுவாகப் பாராட்டினார்.

மாமன்றத்தின் பேரா மாநிலத் தலைவரும் ஏற்பாட்டுக்குழு தலைவருமான கிருஷ்ணன் சுப்பிரமணியம் வரவேற்புரை ஆற்றினார். மாமன்றத்தின் தேசிய துணைத்தலைவர் ரிஷிகுமார் வடிவேலு தலைமை உரை ஆற்றினார். மலேசிய இந்து சங்கம், மஞ்சோங் இந்து சபா, இந்து இளைஞர் இயக்கம், நாம் நற்பணி இயக்கம், சித்தர் குடில், ஐயப்பா சேவை சங்கம் ஆகியவை இணை ஆதரவாளர்களாவர்.

 

spot_img

latest articles

explore more