Homeசமூகம்ஜம்ரி வினோத் மீது உரிய நடவடி‌க்கை எடுப்பீர்!  டத்தோஸ்ரீ எம். சரவணன் வலியுறுத்து 

ஜம்ரி வினோத் மீது உரிய நடவடி‌க்கை எடுப்பீர்!  டத்தோஸ்ரீ எம். சரவணன் வலியுறுத்து 

கோலாலம்பூர், மார்ச் 6-தைப்பூசத் திருவிழாவில் இந்துக்கள் வேல் வேல் என்று கூறுவதை பேய் பிடித்தவர்கள் அல்லது போதையில் உள்ளவர்களுடன் ஒப்பிட்டு சர்ச்சைக்குரிய சமய போதகர் ஜம்ரி வினோத் செய்த தாக்குதலை மஇகா துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் கடுமையாகச் சாடினார்.

அவரின் இந்த கருத்துகள் பொறுப்பற்றதாகவும் மிகவும் அவமரியாதைக்குரியதாகவும் உள்ளன என்றார் காவடி ஏந்தி நேர்த்திக் கடனை நிறைவேற்றியிருக்கும் சரவணன்.

அக்கருத்துகளை வெளிப்படையாகத் தாம் புறக்கணிப்பதாக அவர் சொன்னார்.

இது மடானி அரசாங்கத்தால் கடைபிடிக்கப்படும் 3ஆர் எனப்படும் இனம், மதம், அரச ஆட்சியாளர்கள் கொள்கைகளின் தெளிவான அத்துமீறலாகும்.

இந்துக்களின் உணர்வைப் பாதிக்கும் இத்தகைய அறிக்கைகள் நமது நாட்டின் நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கும்.

இவர் மீது பல போலீஸ் புகார்கள் ஏற்கெனவே செய்யப்பட்டுள்ளன.இவற்றின் அடிப்படையில் போலீஸ், அரசாங்கம் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

ஜம்ரியின் தொடர்ச்சியான குற்றங்கள்  இந்துக்களின் நம்பிக்கை, அதன் கலாச்சாரம் பாரம்பரியத்திற்கு நேரடி அவமானமாகும்.ஜம்ரி இந்து மதத்தை அவமதிப்பது இது முதன் முறை அல்ல.

இதன் பொருட்டு அவர் மீது விரைவாக வழக்குத் தொடரப்படுவதை உறுதி செய்யுமாறு உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுதியோனை டத்தோஸ்ரீ சரவணன் கேட்டுக் கொண்டார்.

ஒவ்வொரு முறையும் அவர் இதுபோன்ற புண்படுத்தும் கருத்துகளைச் சொல்லும்போது, பொறுப்பைத் தவிர்க்க பலவீனமான சாக்குகளுக்குப் பின்னால் ஒளிந்து கொள்கிறார்.

இந்த முறை இந்த விவகாரம் முடிவுக்கு வர வேண்டும். நமது சமூகத்தில் நல்லிணக்கத்தையும் பரஸ்பர மரியாதையையும் நிலைநிறுத்த இவ்விவகாரத்தில் உறுதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றார்.

 

spot_img

latest articles

explore more