கோலாலம்பூர், ஜூலை 14-
மே 1ஆம் தேதி முதல் முட்டைகளுக்கான உதவி தொகை 5 சென் குறைக்கப்பட்டாலும் சந்தையில் அவற்றின் விநியோகம் சீராக உள்ளதாக விவசாயம், உணவு பாதுகாப்பு துறை அமைச்சர் டத்தோஶ்ரீ முஹமது சாபு கூறினார் .
சந்தையில் கோழி முட்டைகளின் விநியோகம் நிலையானதாகவும் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் போதுமானதாகவும் இருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
உதவி தொகை குறைக்கப்பட்டது கோழி முட்டை விநியோகத்தை எவ்விதத்திலும் பாதிக்கவில்லை.
தவிர, உள்ளூர் உற்பத்தியின் நிலைத்தன்மையையே இது வெளிப்படுத்துகிறது என்று தமது முகநூல் பதிவில் முஹமது சாபு சுட்டிக் காட்டினார்.
கோழி முட்டைகளுக்கான உதவி தொகை ஒரு முட்டைக்கு 10 சென்னில் இருந்து ஐந்து சென்னாகக் குறைக்கப்படும் என்றும் இந்த உதவி தொகை ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் முழுமையாக நிறுத்தப்படும் என்றும் அரசாங்கம் இதற்கு முன்னர் அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.


