Homeஅரசியல்3R விவகாரங்கள் உள்ளடக்கமாக்குவதைத் தவிர்க்க வேண்டும்: யுனேஸ்வரன் வலியுறுத்து

3R விவகாரங்கள் உள்ளடக்கமாக்குவதைத் தவிர்க்க வேண்டும்: யுனேஸ்வரன் வலியுறுத்து

கோலாலம்பூர்:

சமூக நல்லிணக்கத்தைப் பாதுகாக்கும் வகையில், இனம், மதம், ஆட்சியாளர் தொடர்பான விவகாரங்களையும் குறிப்பாக மதச் சடங்குகளை சமூக ஊடக உள்ளடக்கமாகப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு சமூக ஊடகப் பிரபலங்களுக்குத் தேசிய ஒருமைப்பாட்டுத் துணையமைச்சர் யுனேஸ்வரன் ராமராஜ் அறிவுறுத்தியுள்ளார்.

அதிகமான பின்தொடர்பாளர்களைக் கொண்ட சமூக ஊடகப் பிரபலங்கள், தாங்கள் உருவாக்கும் உள்ளடக்கங்களில் கூடுதல் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும், சமூகத்தில் நேர்மறையான மதிப்புகளை வளர்க்கும் வகையில் செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

“3R தொடர்பான விவகாரங்களைத் தவிர்ப்பது நல்லது. குறிப்பாக, பிற மதங்களின் சடங்குகள் அல்லது குறிப்பிட்ட இனத்தவரின் பழக்கவழக்கங்கள் குறித்து முழுமையாக அறிந்திருக்காதவர்கள் அவற்றை உள்ளடக்கமாகப் பயன்படுத்துவதில் கவனமாக இருக்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.

பல்வேறு சமூகங்களிடையே நல்லிணக்கத்தை வளர்க்கும் பல நேர்மறையான அம்சங்களைத் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சுடன் இணைந்து சமூக ஊடகப் பிரபலங்கள் முன்னெடுக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

பத்துமலை தைப்பூசத் திருவிழாவின்போது, ஒரு சமூக ஊடகப் பிரபலம் மதச் சடங்கில் ஈடுபட்டதாகக் கூறப்படும் காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டதைத் தொடர்ந்து, பெர்னாமா தொலைக்காட்சியின் ‘ருவாங் பிச்சாரா’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்த விவகாரத்தை அமைச்சு தீவிரமாகக் கருதுவதாகக் குறிப்பிட்ட யுனேஸ்வரன், விசாரணையைச் சம்பந்தப்பட்ட மத அதிகாரிகளும் மலேசியக் காவல்துறையும் மேற்கொள்ள இடமளிக்க வேண்டும் என்றார்.

விசாரணை முடிவடைவதற்கு முன்னரே யாரையும் குற்றவாளியாகக் கருதுவதோ அல்லது இந்த விவகாரத்தை அரசியலாக்குவதோ கூடாது என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

மேலும், சமூக ஊடகப் பிரபலங்கள் கூட்டரசு அரசியலமைப்பு, தேசியக் கோட்பாடான ருக்குன் நெகாரா மற்றும் தேசிய ஒருமைப்பாட்டை வலுப்படுத்தும் ‘நெகாரா பங்சா’ திட்டம் ஆகியவற்றை மக்களிடம் கொண்டு சேர்க்க அமைச்சுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.

பல்வேறு இனங்களையும் மதங்களையும் சேர்ந்த மக்கள் ஒருவருக்கொருவர் நடத்தும் விழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளலாம் என்றாலும், மதச் சடங்குகள் தொடர்பான விஷயங்களில் உரிய மரியாதையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இதற்கிடையில், பிற மதத்தின் சடங்கில் இஸ்லாமியர் ஒருவர் கலந்துகொண்டதாகக் கூறப்படும் சமூக ஊடகப் பதிவு தொடர்பாக விசாரணையைத் தொடங்கியுள்ளதாகச் சிலாங்கூர் இஸ்லாமிய சமயத் துறை (JAIS) நேற்று தெரிவித்திருந்தது.

spot_img

latest articles

explore more