Homeசமூகம்மாற்றுத்திறனாளி குழந்தைகள், ஆதரவற்றோருக்கு நகைச்சுவை விருந்து படைத்த மோஜோ புரோஜெக்ஸ்

மாற்றுத்திறனாளி குழந்தைகள், ஆதரவற்றோருக்கு நகைச்சுவை விருந்து படைத்த மோஜோ புரோஜெக்ஸ்

பெட்டாலிங் ஜெயா:

மாற்றுத்திறனாளி குழந்தைகள் மற்றும் ஆதரவற்ற பெரியவர்கள் உட்பட 100-க்கும் மேற்பட்டோருக்கு தீபாவளிப் பெருநாளை முன்னிட்டு மகிழ்ச்சியான அனுபவத்தை வழங்கும் வகையில், மோஜோ புரோஜெக்ஸ் (Mojo Projects), மலேசிய இந்திய சமூக மையத்துடன் (MICC) இணைந்து நகைச்சுவைக் கலைஞர் பிரவின் குமாரின் ‘நானும் ஃபுடீ தான்’ (Naanum Foodie Dhaan) நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தது.

பெட்டாலிங் ஜெயாவில் உள்ள மெனாரா பிஏசியின் ஓம்னியா அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், கிற்டார்ஷ் (KIRTARSH) மாற்றுத்திறனாளி குழந்தைகள் பராமரிப்பு இல்லத்தைச் சேர்ந்த குழந்தைகளும் ஆதரவற்ற பெரியவர்களும் பங்கேற்றனர்.

மோஜோ நகைச்சுவை சீரிஸின் ஒரு பகுதியாக நடைபெற்ற இந்நிகழ்ச்சி, உணவு தொடர்பான அன்றாட அனுபவங்கள், பழக்கவழக்கங்கள் மற்றும் நினைவுகளை நகைச்சுவை வழியாக வெளிப்படுத்தியது.

நிகழ்ச்சிக்கு முன்னதாக, கிற்டார்ஷ் மையத்திலிருந்து வந்த விருந்தினர்களுக்கு அன்பளிப்புப் பைகள் மற்றும் உணவு வழங்கப்பட்டதுடன், பிரவின் குமாரை நேரில் சந்திக்கும் வாய்ப்பும் வழங்கப்பட்டது.

மோஜோ புரோஜெக்ஸின் தலைமைச் செயல் அதிகாரியும் நிறுவனருமான ரத்னா கே. நடராஜன், பிரவீன் குமாருடன் இணைந்து விருந்தினர்களுக்கு அன்பளிப்புகளை வழங்கி, அவர்களுடன் புகைப்படங்களும் எடுத்துக்கொண்டார்.

தீபாவளியின்போது மற்றவர்களுக்குத் தேவையான பொருள்களை வழங்குவது மட்டுமன்றி, அவர்கள் மகிழ்ச்சியடையும் அனுபவங்களையும் வழங்குவது முக்கியம் என ரத்னா குறிப்பிட்டார்.

பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும் நிறுவனமாக, தங்களால் பகிர்ந்துகொள்ளக்கூடிய மகிழ்ச்சியை கிற்டார்ஷ் மையத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கும் வழங்க விரும்பியதாக அவர் கூறினார்.

இம்முயற்சிக்கு பியூர்சைவா (PureSaiva), ஹரேகிருஷ்ணா டெக்ஸ்டைல்ஸ் (Harekrishna Textiles) மற்றும் குட்டே மில்க் (Goodday Milk) ஆகிய நிறுவனங்கள் ஆதரவு வழங்கின. மோஜோ புராஜெக்ட்ஸின் உத்திபூர்வ கூட்டாளியான டிஎன்ஏ கிரியேட்டிவ் கம்யூனிகேஷன்ஸும் (DNA Creative Communications) கூடுதல் ஆதரவையும் வழங்கியது.

சிறுவயதில் சாப்பிட்ட சிற்றுண்டிகள், வீட்டில் தயாரிக்கப்படும் பிரியாணி, கஃபே உணவுப் பழக்கங்கள், உணவு விநியோகச் செயலிகள் மற்றும் உணவகங்களில் மாறிவரும் பழக்கவழக்கங்கள் குறித்து பிரவின் குமார் நகைச்சுவையாகப் பேசினார்.

தமிழ்ச் சொல் விளையாட்டுகள் மற்றும் தனது சொந்த அனுபவங்கள் வழியாக, உணவு எவ்வாறு நினைவுகள், ஆறுதல் மற்றும் அன்புடன் பின்னிப் பிணைந்துள்ளது என்பதையும் அவர் வெளிப்படுத்தினார். குறிப்பாக, தமிழர்களிடையே அன்பை வெளிப்படுத்தும் வகையில் பயன்படுத்தப்படும் ‘சாப்பிட்டியா?’ என்ற கேள்வியும் நிகழ்ச்சியில் இடம்பெற்றது.

இதற்கு முன்னதாக, பிரவீன் குமாரின் ‘ஃபேமிலி மேன் ரிட்டர்ன்ஸ்’ (Family Man Returns) நிகழ்ச்சியையும் மோஜோ புராஜெக்ட்ஸ் ஏற்பாடு செய்திருந்தது. அந்த நிகழ்ச்சி குடும்ப வாழ்க்கையை மையமாகக் கொண்டிருந்த நிலையில், ‘நானும் ஃபுடீ தான்’ நிகழ்ச்சி உணவு மேசையைச் சுற்றியுள்ள பழக்கவழக்கங்கள், விருப்பங்கள் மற்றும் அன்றாட அனுபவங்களை நகைச்சுவையுடன் எடுத்துரைத்தது.

spot_img

latest articles

explore more