Homeமலேசியாபோலி டிக் டாக் கணக்கு மூலம் வேலைவாய்ப்பு விளம்பரம்: பொதுமக்களுக்கு கேடிஎம்பி எச்சரிக்கை

போலி டிக் டாக் கணக்கு மூலம் வேலைவாய்ப்பு விளம்பரம்: பொதுமக்களுக்கு கேடிஎம்பி எச்சரிக்கை

கோலாலம்பூர், நவம்பர் 24:

கேடிஎம்பி நிறுவனத்தின் பெயர் மற்றும் சின்னத்தைப் பயன்படுத்தி டிக் டாக் சமூக ஊடகத்தில் போலியான வேலைவாய்ப்பு விளம்பரங்கள் வெளியிடப்படுவது குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு மலேசிய ரயில் நிறுவனம் (கேடிஎம்பி) அறிவுறுத்தியுள்ளது.

jawatan.kosong.ktm1 என்ற டிக் டாக் கணக்கு மூலம் வேலைவாய்ப்புகள் விளம்பரப்படுத்தப்படுவதைத் தொடர்ந்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அந்தக் கணக்கு கேடிஎம்பி நிறுவனத்திற்குச் சொந்தமானது அல்ல என்றும், நிறுவனத்தின் சார்பில் வேலைவாய்ப்பு விண்ணப்பங்களைப் பெறுவதற்கு அதற்கு எந்தவொரு அதிகாரமும் வழங்கப்படவில்லை என்றும் நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது.

வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிப்பதற்கு முன்பும், தனிப்பட்ட தகவல்களைப் பகிர்வதற்கு முன்பும், கேடிஎம்பி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ தகவல் தொடர்பு வழிகள் மூலம் வேலைவாய்ப்பு அறிவிப்புகளின் நம்பகத்தன்மையைச் சரிபார்க்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

மேலும், சம்பந்தப்பட்ட போலிக் கணக்கை டிக் டாக் நிர்வாகத்திடம் புகாரளித்து, அக்கணக்கை முடக்குவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள உதவுமாறும் கேடிஎம்பி பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.

வேலைக்கு ஆள்சேர்க்கும் நடவடிக்கைகளை நிர்வகிப்பதற்காக எந்தவொரு மூன்றாம் தரப்பினரையும் கேடிஎம்பி நியமிக்கவில்லை என்றும், அதற்கெனத் தனியாக எந்தவொரு சமூக ஊடகக் கணக்கையும் உருவாக்கவில்லை என்றும் நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.

காலிப் பணியிடங்கள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்களை www.ktmb.com.my என்ற இணையத்தளம் மற்றும் கேடிஎம்பி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கங்கள் வாயிலாகப் பொதுமக்கள் அறிந்துகொள்ளலாம்.

சந்தேகத்திற்குரிய வேலைவாய்ப்பு அறிவிப்புகளைப் பெறும் பொதுமக்கள், சம்பந்தப்பட்ட கணக்கின் நிர்வாகிகளிடம் தங்களின் தனிப்பட்ட தகவல்களை வழங்குவதைத் தவிர்த்து, அந்தக் கணக்கை டிக் டாக்கிடம் புகாரளிக்குமாறும் கேடிஎம்பி அறிவுறுத்தியுள்ளது.

spot_img

latest articles

explore more