கோலாலம்பூர், நவ. 16 – மலேசிய தமிழ்ச் சமூகத்தின் கல்வி, சமூகப் பணிகளுக்கு அரும்பாடுபட்டவரும், மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றப் பேரவையின் நான்காவது தேசியத் தலைவருமான மணிப்பூஷன், மணிச்சுடர், மணிச்செம்மல் டத்தோ ஆர்.ஆர்.எம். கிருஷ்ணன் காலமானார்.
இவர் இன்று (நவம்பர் 16) தமது 74ஆவது வயதில் காலமானார்.
1951 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் நாள் ஈப்போவில் பிறந்த டத்தோ ஆர்.ஆர்.எம். கிருஷ்ணன் தமது வாழ்க்கையை மருத்துவத் துறையிலும் சமூகப் பணியிலும் அர்ப்பணித்து வாழ்ந்தவர் ஆவார்.
1971 ஆம் ஆண்டு தற்காலிக ஆசிரியராகத் தமது பணியைத் தொடங்கிய இவர், பின்னர் மருத்துவம் பயின்று மக்கள் சேவையில் ஈடுபட்டார்.
இவர் 1974 ஆம் ஆண்டு மலேசிய மருத்துவ உதவியாளராகத் தேர்ச்சி பெற்று நிரந்தரப் பணியில் சேர்ந்தவர்.
தமது பணி ஓய்வுக்குப் பிறகும் எம்.எஸ்.யூ. பல்கலைக்கழகத்தின் மாணவர்களுக்கு மருத்துவமனை உதவியாளர் துறையில் பயிற்சி அளித்து, வழிகாட்டி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மணிமன்றத்தின் உறுப்பினராக 1971 ஆம் ஆண்டு இணைந்த இவர், மாநில, தேசியப் பொறுப்புகளில் படிப்படியாக உயர்ந்து, மணிமன்றத்தின் வளர்ச்சிக்குத் தன்னலமற்ற பங்களிப்பை வழங்கினார்.
1980 முதல் 1988 ஆம் ஆண்டு வரை தேசிய பொருளாளராகவும், 1989 முதல் 1990 வரை தேசியத் துணைத் தலைவராகவும் மணிமன்றத்திற்குச் சேவை செய்தவர்.
1990 முதல் 2004 ஆம் ஆண்டு வரை சுமார் 15 ஆண்டுகள் மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றப் பேரவையின் தேசியத் தலைவராகப் பதவி வகித்த இவர், மணிமன்ற வரலாற்றில் நீடித்த சேவை செய்த தலைவர்களில் ஒருவராகப் போற்றப்படுகிறார்.
இவரின் அயராத உழைப்பாலும் முன்னாள் பொதுப்பணி அமைச்சரும், மஇகாவின் மேனாள் தேசியத் தலைவருமாகிய துன் ச.சாமிவேலுவின் உதவியாலும் மணிமண்டபம் கடனில் இருந்து மீண்டது.
இவரின் காலக்கட்டத்தில் தான் மணிமன்ற உறுப்பினர் பதிவேடும் பதிவு புத்தகமும் எல்லா மன்றங்களுக்கும் வழங்கப்பட்டது. தேசியப் பேராளர் மாநாடுகளை 5 நட்சத்திர தங்கும் விடுதிகளில் நடத்திய பெருமையும் இவரையே சாரும்.
மணிமன்ற மணிகளின் மேம்பாட்டைக் கருத்தில் கொண்டு எண்ணற்ற நிகழ்வுகளைத் தொடர்ச்சியாக மேற்கொண்டு அதிக இளைஞர்களை மணிமன்றத்தில் இணைக்கும் திட்டத்தில் வெற்றியும் கண்டவர் ஆர்.ஆர்.எம். கிருஷ்ணன்.


