கோலாலம்பூர்:
1998-ஆம் ஆண்டு கோலாலம்பூர் காமன்வெல்த் விளையாட்டில் 50 கி.மீ. நடைப்பந்தயத்தில் தங்கம் வென்று நாட்டிற்குப் பெருமை சேர்த்த தேசிய வீரர் ஜி. சரவணன் (56), தற்போது மோட்டார் நியூரோன் (MND) எனும் கடுமையான நரம்பியல் நோயுடன் தனது வாழ்க்கைப் போராட்டத்தை எதிர்கொண்டு வருகிறார்.
2021-ஆம் ஆண்டு முதல் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ள சரவணன், தற்போது நடக்கும், பேசும் மற்றும் உண்ணும் திறனை இழந்துள்ளார். 75 கிலோ எடையுடன் இருந்த அவர், தற்போது 40 கிலோவாகக் குறைந்து மிகவும் மெலிந்து காணப்படுகிறார்.
பினாங்கின் புக்கிட் மெர்தாஜாமில் உள்ள அவரது இல்லத்தில், மனைவி எம். சசிகலா மற்றும் மூன்று பிள்ளைகள் அவருக்கு 24 மணிநேரமும் பராமரிப்பு வழங்கி வருகின்றனர். சரவணன் தற்போது குழாய் மூலம் உணவு உட்கொள்கிறார்; சுவாசக் கருவியின் உதவியுடன் சுவாசிக்கிறார். இவரது மகன் பிரசாத் மட்டுமே தற்போது வேலைக்குச் சென்று குடும்பத்தைக் கவனித்து வருகிறார்.
சமீபத்தில் பினாங்கில் உள்ள தனியார் மருத்துவமனையில் 20 நாட்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டிருந்தபோது, அவரது மருத்துவச் செலவு RM100,000-ஐத் தாண்டியது. மருத்துவக் காப்பீடு (Medical Card) முழுமையாகப் பயன்படுத்தப்பட்ட நிலையில், போதிய வசதியின்றி அவர் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டார்.
தற்போது அவரது மாதாந்திர மருத்துவச் செலவு சுமார் RM2,000 ஆக உள்ளது. இதற்கு தேசிய தடகள வீரர்கள் நல வாரியம் (Yakeb) மற்றும் பெர்கேசோ (Socso) போன்ற அமைப்புகள் உதவி வருகின்றன. எனினும், மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டால், பொதுமக்களின் நிதியுதவி தேவைப்படும் என அவரது மனைவி உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.
நாட்டின் பெருமைமிகு இந்த வீரரின் நிலையைப் பார்த்து அவரது சக நண்பர்களும் முன்னாள் வீரர்களும் மிகுந்த கவலையில் உள்ளனர்.


