மலாக்கா, ஜூலை 17-
நமது கலை, பண்பாடு கட்டிக் காக்கப்படுவதற்கு இளைஞர்களிடையே தமிழ் மொழி மற்றும் இலக்கிய உணர்வு மேலோங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
மொழி என்பது ஓர் இனத்தின் உயிர்மூச்சு. இதன் வாயிலாகவே இலக்கியம், பண்பாடு போன்றவற்றை சமூகத்தில் வேரூன்றிட செய்ய முடியும் என்று மலாக்கா மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ சண்முகம் குறிப்பிட்டார்.
இங்குள்ள ஶ்ரீ பெங்காலான் இடைநிலைப்பள்ளி மண்டபத்தில் நடைபெற்ற “செந்தமிழ் விழா 2025” நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்து உரை நிகழ்த்துகையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
“ தாய்மொழியின் பயன்பாட்டை வலுப்படுத்துவதன் மூலம் நமது பண்பாடும் பாரம்பரியமும் நிலைத்து நிற்கும்,” என அவர் வலியுறுத்தினார்.
இந்தச் செந்தமிழ் விழாவின் வெற்றிக்கு இதன் ஒருங்கிணைப்புக் குழுவின் ஆலோசகரான மலாக்கா மாநில கல்வி இலாகாவின் தமிழ்மொழிப் பிரிவு உதவி இயக்குனர் முருகையா பெரும் பங்காற்றினார்.
அவரது வழிகாட்டுதலும், கடும் முயற்சியுமே இந்த விழாவை சிறப்புற நடத்த உதவியதாகக் கூறப்பட்டது.
மலாக்கா மாநில கல்வி இலாகா, மாநில மஇகா, மலாக்கா மாநிலத் தமிழ் இளைஞர் மணிமன்றப் பேரவை, மலாக்கா மாநிலத் தமிழ்ப்பள்ளித் தலைமையாசிரியர் சங்கம் ஆகியவை கூட்டாக இணைந்து இந்த விழாவை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தன.
போட்டிகளின் இறுதியில், மாநில அளவிலான வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.
அவ்வகையில் இடைநிலைப்பள்ளி பிரிவில் பாயா ரும்புட் இடைநிலைப்பள்ளி ஒட்டுமொத்த வெற்றியாளர்களாகவும் தமிழ்ப்பள்ளி பிரிவில் மலாக்கா குபு தமிழ்ப்பள்ளி ஒட்டுமொத்த வெற்றியாளர்களாகவும் வாகை சூடின.
இந்த செந்தமிழ் விழா, மலாக்கா மாநிலத்தில் தமிழ் மொழி, கலை, பண்பாடு ஆகியவற்றைப் பேணிக் காப்பதற்குப் பெரும் உந்துதலாக அமைந்தது என்றால் மிகையாகாது.
அதே வேளையில், வருங்காலத் தலைமுறையினருக்குத் தமிழ் மொழியின் பெருமையை எடுத்துரைக்கும் ஒரு முக்கிய நிகழ்வாகவும் இது திகழ்ந்தது.


