ரவாங், ஜூலை 31-
இந்து சமூகத்தில் நிலவும் பல்வேறு சிக்கல்கள் களையப்பட வேண்டும். இதற்கு அனைத்து இந்து மாணவர்களுக்கும் இள வயது முதல் அடிப்படை இந்துதர்ம கல்வி கட்டாயமாகக் கற்பிக்கப்பட வேண்டும் என்றும் அதற்கு இந்து தர்ம வகுப்புகள் கோயில்களிலும் பல்வேறு பொது இடங்களிலும் பரவலாக நடத்தப்பட வேண்டியது மிக அவசியம் என்றும் மலேசிய இந்து தர்ம மாமன்றத்தின் தேசியத் தலைவர் ரிஷிகுமார் வடிவேலு வலியுறுத்தினார்.
கடந்த ஜூலை 26, 27ஆம் தேதிகளில் காலை 8.00 மணி தொடங்கி மாலை 5.30 மணி வரையில் இங்கு பத்து 16இல் உள்ள அருள்மிகு ஶ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்தில் மலேசிய இந்துதர்ம மாமன்றத்தின் ஏற்பாட்டில் 2 நாள் இந்துதர்ம ஆசிரியர் பயிலரங்கு மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது.
இந்தப் பயிலரங்கின் நிறைவு விழாவில் உரையாற்றிய ரிஷிகுமார் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்து தர்ம வகுப்புகள் பாடத்திட்டத்தில் வரையறுக்கப்பட்ட நோக்கங்கள் மாணவர்களைச் சென்றடையும் வகையில் முறையாகத் திட்டமிடப்பட்டு கற்றல் கற்பித்தல் பயிற்று முறைமைகளையும் மகிழ்வூட்டும் பல்வேறு கற்பித்தல் அணுகுமுறைகளையும் கையாள ஆசிரியர்களுக்குப் இப்பயிலரங்கில் பயிற்சிகள் வழங்கப்பட்டன.

இந்தப் பயிலரங்கில் சிலாங்கூர், கிளந்தான், ஜொகூர் ஆகிய மாநிலங்களிலிருந்து 30 சமய ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
மலேசிய இந்து தர்ம மாமன்றம் தயாரித்துள்ள இந்து தர்ம பாடத்திட்டம், ஆசிரியர் கையேடு, இந்து தர்ம மாணவர்களுக்கான ஆறு இந்து தர்ம பாட நூல்கள் முதலியவை பற்றி பயிலரங்கில் கலந்துகொண்ட சமய ஆசிரியர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
இந்த ஆவணங்களைக் கொண்டு எளிமையான முறையில் சமயத்தை மாணவர்களுக்கு கற்பிக்கும் பயிற்சிகளும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டன.
இந்துதர்ம கோட்பாடுகள், கடவுள் கொள்கைகள் முதலிய தலைப்புகளில் மட்டுமின்றி ஆசிரியர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் வகுப்புகளை முறையாக நடத்தும் முறைமைகளைப் பற்றிய விரிவுரைகளும் பயிலரங்கில் இடம் பெற்றன.
மாமன்றத்தின் ஆலோசகர் இராதாகிருஷ்ணன் அழகுமலை, மாமன்றத்தின் இந்துதர்ம கல்வி தேசிய உபக்குழுத் தலைவர் சுப்பிரமணி சோணையா, துணைத்தலைவர் ஏகே ரமேஷ், தேசிய பொதுச் செயலாளர் திரு.ஹரிபிரகாஷ் சந்திரன் ஆகியோர் இப்பயிலரங்கை வழி நடத்தினர். பயிலரங்கில் கலந்துகொண்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
இப்பயிலரங்கு 2 நாள்கள் வெற்றிகரமாக நடைபெறுவதற்குப் பத்து 16, அருள்மிகு ஶ்ரீ சுப்பிரமணியர் ஆலய நிர்வாகத்தினர் இட வசதியையும் உணவுகளையும் வழங்கி மிகவும் சிறந்த முறையில் ஆதரவும் நல்கினர்.
ஆலயத்தின் தலைவரும் துணைத்தலைவரும் கூட இந்தப் பயிலரங்கில் பங்கேற்பாளர்களாகக் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் பயிலரங்கைச் சிறப்பாக வழிநடத்திய மாமன்றத்தினருக்கும் ஆதரவு நல்கிய நல்லுள்ளங்களுக்கும் ஆலயத்தின் தலைவர் மகேந்திரன் முத்து நன்றி தெரிவித்தார்.
இதனிடையே, இந்தப் பயிலரங்கில் கலந்துகொண்ட ஆசிரியர்கள் தங்கள் வசிப்பிடங்களில் இந்து தர்ம வகுப்புகளைத நடத்த வேண்டும் என்று வலியுறுத்திய ரிஷிகுமார், தானும் இது போன்ற சமயப் பணிகளில் தொடர்ந்து ஆழமாக ஈடுபட்டு வருவதற்கு இத்தகைய ஒரு பயிலரங்குதான் தொடக்கப்புள்ளியாக இருந்ததாகக் குறிப்பிட்டார். இந்து தர்ம கல்வி மாணவர்களைச் சென்றடைய இந்து தர்ம வகுப்புகள் பரவலாக நடத்தப்பட வேண்டும். அதற்கு அதிகமாக இந்து தர்ம ஆசிரியர்கள் உருவாக்கப்பட வேண்டும். இதனையே தார்மீக நோக்கமாகக் கொண்டு மாமன்றம் கடந்த 43 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது. மாமன்றத்தின் ஆலோசகர் இராதாகிருஷ்ணன் அழகுமலை, மாமன்றத்தின் இந்துதர்ம கல்வி தேசிய உபக்குழுத் தலைவர் சுப்பிரமணி சோணையா ஆகியோர் சீரிய வழிகாட்டுதலிலும் ஆலோசனையிலும் மாமன்றம் இந்த இலக்கை நோக்கிப் பயணிக்கும் என அவர் குறிப்பிட்டார்.
மேலும், ஓர் ஆலயத்தின் பணி என்பது பூஜைகள் கிரியைகள் மட்டுமல்லாமல் இந்து சமயக்கல்வி அனைத்து இந்து மாணவர்களையும் சென்றடையும் வகையில் சமூகக் கடப்பாட்டையும் உள்ளடக்கியுள்ளது.
அந்த வகையில், சிறந்த முன்னுதாராணமாக விளங்கும் பத்து 16, அருள்மிகு ஶ்ரீ சுப்ரமணியர் ஆலய நிர்வாகத்தினருக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

