புக்கிட் ரோத்தான், ஆக. 15-
இந்நாட்டில் இந்துதர்மத்தை நிலைநாட்ட தாம் தொடர்ந்து பாடுபடப்போவதாக புதிதாக நியமிக்கப்பட்ட மலேசிய இந்துதர்ம மாமன்றத்தின் தேசிய தலைவர் ரிஷிகுமார் வடிவேலு கூறினார்.
மலேசிய இந்துதர்ம மாமன்றத்தின் புதிய தேசியப் பேரவையினர் பொறுப்பு ஏற்பு விழா ஆகஸ்ட் ஒன்பதாம் தேதி சனிக்கிழமை கோல சிலாங்கூர் புக்கிட் ரோத்தான் ஸ்ரீசக்தி தேவஸ்தான சக்தி புர ஆலயத்தில் மாமன்றத்தின் மூத்த ஆலோசகர் அ.ப. முத்துக்குமார சிவாச்சாரியார் தலைமையில் அம்பாள் அருளாசியுடன் மிக நேர்த்தியாக நடைபெற்றது.
இதில் மாமன்ற தேசியப் பேரவையின் 2025 முதல் 2028 தவணைக்கான புதிய தேசியப் பொறுப்பாளர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன. இப் பேரவைக்குழுவினர் மூன்று ஆண்டுகாலம் பொறுப்பேற்று தங்கள் சேவையினை வழங்குவர்.
காலையில் சங்கல்ப பூஜையுடன் தொடங்கிய விழா விநாயகப் பெருமானின் அருளாசி வேண்டி கணபதி ஹோமத்துடன் மங்கலகரமாக நடைபெற்றது.
இதுபோன்ற பொறுப்பேற்பு விழா நடைபெறுவது மாமன்ற வரலாற்றில் இதுவே முதன் முறை எனவும் இப்பாரம்பரியம் தொடர்ந்து கடைபிடிக்கப்பட வேண்டும் எனவும் மூத்த உறுப்பினர்களில் பலர் கருத்து தெரிவித்தனர்.

கடந்த 12 ஆண்டுகளாக மலேசிய இந்துதர்ம மாமன்றத்தின் தேசியத் தலைவராக பொறுப்பேற்று மிகச் சிறப்பாக மன்றத்தை வழிநடத்தி முத்திரை பதித்த முன்னாள் தேசியத் தலைவர் திருமிகு இராதாகிருஷ்ணன் அழகுமலைக்கு அ.ப. முத்துக்குமார சிவாச்சாரியார் ராமஜென்ம பூமியின் சால்வையும் பூமாலையும் அணிவித்து ஆசி கூறி சிறப்பு செய்தார்.
முன்னதாக கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற தேசியப் பேராளர் மாநாட்டில் தமது தேசியத் தலைவர் பொறுப்பினை துணைத்தலைவரான ரிஷிகுமார் வடிவேலிடம் பேராளர்கள் மத்தியில் மகிழ்ச்சியுடன் ஒப்படைத்திருந்தார் இராதாகிருஷ்ணன் அழகுமலை.
புதிய தலைவர் ரிஷிகுமாருக்கு தமது வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்த அதே வேளையில் மாமன்றத்தை முன்னோக்கி கொண்டு சென்று முன்னுதாரன இயக்கமாகத் திகழச் செய்யுமாறும் கேட்டுக் கொண்டார்.
மாமன்றம் ஒரு குடும்பம் எனும் கோட்பாட்டிற்கு ஏற்ப தலைமைத்துவ மாற்றம் மிகச்சீரான முறையில் நடைபெற்றதைக் கண்டு பலரும் பாராட்டி அகமகிழ்ந்தனர்.
இதுதான் மாமன்றத்தின் தோற்றுனர் ஞானாசிரியர் கர்னல் கரு.சாத்தையா கட்டிக்காத்து வளர்த்த மாமன்றத்தின் பாரம்பரியப் பெருமை என மூத்த பேராளர்கள் பாராட்டு தெரிவித்திருந்தனர்.
மாமன்றத்தின் முன்னாள் தலைவர்களின் வழிகாட்டுதலில் தாம் வளர்ந்து வந்துள்ளதாகவும் இப்பொறுப்பினை ஏற்கும் அளவுக்கு தன்னை செதுக்கிய மாமன்றத்தின் அத்துணை முன்னோடிகளுக்கும் தாம் நன்றிக்கடன் பட்டுள்ளதாகவும் புதிதாக தேசியத் தலைவர் பதவியை ஏற்றுக்கொண்ட ரிஷிகுமார் வடிவேலு மனம் நெகிழ்ந்து கூறினார்.
மலேசியத் திருநாட்டில் இந்துதர்மத்தை நிலைநாட்ட தொடர்ந்து பாடுபடப்போவதாகக் கூறிய அவர் வேர்களைப் பலப்படுத்தும் பணிகளைச் இன்னும் தீவிரமாக செயல்படுத்த திட்டமிட்டுள்ளதாகக் கூறினார்.
நாடு முழுவதும் இயங்கும் அருள்நிலையங்களுக்கு வருகை தர விருப்பதாகவும் மாநிலத்தை பலப்படுத்தும் பணிகளிலும் உறுப்பினர்களை சேர்ப்பிக்கும் பணிகளிலும் கவனம் செலுத்தப் போவதாகவும் கூறினார்.
அதே வேளையில், இந்துதர்மத்தை நிலைநாட்ட நாட்டிலுள்ள எல்லா சமய, சமூக இயக்கங்களுடன் ஒன்றிணைந்து பணியாற்ற தாம் தயாராக இருப்பதாகவும் ரிஷிகுமார் குறிப்பிட்டார்.
புதிதாக தேசியப் பேரவைப் பொறுப்புகளை ஏற்றுக் கொண்ட அனைவருக்கும் தமது மனமார்ந்த வாழ்த்துகளையும் நன்றிகளையும் கூறிக்கொண்டார்.
ஒவ்வொருவரும் தங்கள் கடமைகளை உணர்ந்து சேவையாற்றிட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.


